காசா மக்கள் உணவின்றி வாடி வரும் நிலையில், அவர்கள்மீதான தாக்குதலை இஸ்ரேல் தீவிரப்படுத்தியுள்ளது.
இஸ்ரேல் நேற்று நடத்திய தாக்குதலில் குறைந்தபட்சம் 38 பேர் பலியாகியுள்ளனர். இவர்களில் சிறார்களும் உள்ளடங்குகின்றனர்.
பட்டினி ஒருபக்கம், தாக்குதல் மறுபக்கம் என காசா மக்கள் தத்தளிக்க, முழு காசாவும் மரண பூமியாக மாறிவருகின்றது.
பசியாற உணவு தேடி அலையும் நிலையில் இஸ்ரேலிய ஏவுகணைகளும் பாய்ந்து வருவதால் மரண பயத்துடன் நிலவறைகளில் பதுங்கிக்கொள்ள வேண்டிய நிலை மக்களுக்கு ஏற்பட்டுள்ளது.
மனிதாபிமான உதவி பொருட்களை அனுப்புவதிலும் இஸ்ரேல் மனிதநேயமற்ற விதத்தல் செயற்பட்டுவருகின்றது.
இந்நிலையில் காசாவுக்கு உதவிகள் செல்வதை தடுப்பதற்காக இஸ்ரேல் முன்வைக்கும் காரணங்கள் ஏற்றுக்கொள்ளக் கூடியவை அல்ல என்று ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானீஸி தெரிவித்தார்.
ஒரு ஜனநாயக நாடு உதவிகளை நிறுத்தவது ஏற்புடையது அல்ல, எனவே, மனிதாபிமான உதவிகளை இஸ்ரேல் அனுமதிக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இங்கிலாந்து, பிரான்ஸ் மற்றும் கனடா ஆகிய நாடுகளின் தலைவர்கள், காசாவில் இஸ்ரேலின் நடவடிக்கையைக் கண்டித்து கூட்டறிக்கை விடுத்திருந்தனர்.
இஸ்ரேல் தனது போக்கை மாற்றவில்லை என்றால் நிச்சயமாக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்திருந்தனர்.
மேற்படி கூட்டறிக்கையில் ஆஸ்திரேலியா கையெழுத்திடவில்லை என்றபோதிலும், காசாவுக்கு மனிதாபிமான விநியோகங்களை முழுமையாகவும் , உடனடியாகவும் மீண்டும் தொடங்க அழைப்பு விடுத்துள்ளது.