உக்ரைன்மீதான ரஷ்யாவின் ட்ரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களை ஆஸ்திரேலியா வன்மையாகக் கண்டித்துள்ளது.
ரஷ்யா ஜனாதிபதி புடின், அமைதியை விரும்பவில்லை என்பதையே இந்த கோரத் தாக்குதல் வெளிப்படுத்துகின்றது என ஆஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் பெனி வோங் தெரிவித்தார்.
ரஷ்யாவின் ஆக்கிரமிப்புக்கு எதிராக உக்ரைன் மக்கள் துணியுடன் போராடிவருகின்றனர் எனவும், அவர்களுக்கு பக்க பலமாக ஆஸ்திரேலியா நிற்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
உக்ரைன்மீது ஒரே இரவில் 367 ட்ரோன்களை ஏவி மிகப்பெரிய வான் வழித்தாக்குதலை ரஷ்யா நடத்தியுள்ளது. உக்ரைன் ரஷ்யா போரில் நடந்திருக்கும் மிகப்பெரிய வான் வழித்தாக்குதல் இதுவாகும்.
ரஷ்யாவின் வான்வழித்தாக்குதலில் 3 குழந்தைகள் உட்பட 13 பேர் உயிரிழந்துள்ளனர். பலர் காயமடைந்துள்ளனர்.
கீவ், கார்கிவ், மைக்கோலைவ், டெர்னோபில் மற்றும் கிமெல்னிட்ஸ்கி என பரவலான அளவில் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.
இதனிடையே உக்ரைன் விமானப்படை 267 ட்ரோன்கள் மற்றும் 45 ஏவுகணைகளை சுட்டுவீழ்த்தியதாக தெரிவித்துள்ளது.