தமிழகத்துக்கு ஆன்மீக சுற்றுலாச்சென்ற ஆஸ்திரேலிய வாழ் இந்தியரும், அவரது மகளும் பலியாகியுள்ளனர். மனைவி மற்றும் மற்றைய மகளும் படுகாயமடைந்துள்ளனர்.
இதனால் அவர்களின் குடும்பத்தார் கடும் சோகத்தில் மூழ்கியுள்ளனர். தற்போது அவர்களுக்கு அவசர உதவிகள் தேவைப்படுகின்றன.
இந்தியா பெங்களுரில் இருந்து வேளாங்கண்ணிக்கு சென்ற வேனொன்றும், பஸ்ஸொன்றும் தஞ்சாவூரில் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகின. இதில் ஆறு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இவ்விபத்தில் மெல்பேர்ண் கிளைட் வடக்கு பகுதியை சேர்ந்த சாண்ட்ரா எட்வட் என்பவரின் கணவரும், மகளும் பலியாகியுள்ளனர்.
45 வயதான கணவரும், 6 வயதான மகளுமே உயிரிழந்துள்ளார். சாண்ட்ரா எட்வட் படுகாயமடைந்துள்ளார். அவரது மற்றுமொரு மகளுக்கு மூளை அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.
கணவர் தாஸ் தரப்பில் எவரும் இல்லாததால் தனது மகளை காப்பாற்றுவதற்காக சாண்ட்ரா போராடி வருகின்றார்.
தனது கணவர் மற்றும் மகளுக்கு இந்தியாவில் இறுதிக்கிரியை செய்வதற்கும், தனக்கும், காயமடைந்த தனது மகளுக்கும் சிகிச்சை பெறுவதற்கும் சாண்ட்ராவுக்கு உதவி தேவைப்படுகின்றது. அவர் மீள ஆஸ்திரேலியா வந்து சிகிச்சைப்பெறுவதற்கும் உதவிகளை எதிர்பார்க்கின்றார்.