நாடாளுமன்றத் தேர்தலில் கடும் பின்னடைவைச் சந்தித்த லிபரல் மற்றும் நெஷனல்ஸ் கட்சிகள் மீண்டும் இணைந்து - கூட்டணியாக செயற்படுவதற்குரிய இறுதி இணக்கப்பாட்டை எட்டியுள்ளன.
இது தொடர்பான ஒப்பந்ததும் இன்று கைச்சாத்திடப்பட்டது.
நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான பின்னர், லிபரல் கூட்டணியிலிருந்து நெஷனல்ஸ் கட்சி வெளியேறுகிறது என அக்கட்சியின் தலைவர் அறிவித்தார். இதனால் 80 வருடகால கூட்டணி உறவு முடிவுக்கு வந்தது எனக் கூறப்பட்டது.
எனினும், கூட்டணி உறவை தக்கவைத்துக்கொள்வதற்கு லிபரல் கட்சியின் புதிய தலைவர் சூசன் லே தீவிரம் காட்டினார். கட்சியின் மூத்த உறுப்பினர்களும், நெஷனல்ஸ் கட்சி பிரதிநிதிகளுடன் கலந்துரையாடினார்கள். நிழல் அமைச்சரவை நியமனமும் தாமதப்படுத்தப்பட்டது.
இந்நிலையில் இன்று காலை நடந்த நெஷனல்ஸ் கட்சி கூட்டத்திற்குப் பிறகு - இணைந்து பயணிப்பது பற்றி இறுதி முடிவு எடுக்கப்பட்டது.
நெஷனல்ஸ் நிர்ணயித்த நான்கு கொள்கை கோரிக்கைகளுக்கு லிபரல் கட்சி ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து கட்சிகளுக்கு இடையிலான பிளவுகள் முடிவுக்கு வந்தன. இதற்கமைய நிழல் அமைச்சரவையும் அறிவிக்கப்பட்டுள்ளது.
சபா.தயாபரன்