இலங்கைக்கும், ஆஸ்திரேலியாவுக்கும் இடையிலான அரசியல், பொருளாதாரம் மற்றும் பாதுகாப்புத் துறைகள் சார் இரு தரப்பு உறவை வலுப்படுத்துவது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.
இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட ஆஸ்திரேலிய ஆஸ்திரேலிய துணைப் பிரதமரும் பாதுகாப்பு அமைச்சருமான ரிச்சர்ட் மார்லஸ், வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்துடனும் கலந்துரையாடலில் ஈடுபட்டார்.
இரு நாடுகளுக்கும் இடையிலான சிறப்பான மக்கள் தொடர்புகள் , இருதரப்பு உறவின் மிக முக்கியமான சிறப்பம்சங்களில் ஒன்றென இச்சந்திப்பின்போது வெளிவிவகார அமைச்சர் அமைச்சர் விஜித ஹேரத் சுட்டிக்காட்டினார்.
இலங்கை பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்கான முக்கியமானதொரு உந்து சக்தியான சுற்றுலாத் துறையின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்த அமைச்சர் , இலங்கையை ஓர் விருப்புத் தெரிவுக்கான இடமாகக் கருதுமாறு ஆஸ்திரேலிய உல்லாசப்பயணிகளுக்கு அழைப்பு விடுத்தார்.
ஸ்திரத்தன்மை, அபிவிருத்தி மற்றும் பிராந்திய ஒத்துழைப்பை மேம்படுத்துவதில் இலங்கை அடைந்துள்ள முன்னேற்றத்தை ஆஸ்திரேலிய துணைப் பிரதமரும் பாதுகாப்பு அமைச்சருமான ரிச்சர்ட் மார்லஸ் இதன்போது பாராட்டினார்.
இப்பகுதிகளில் இலங்கை மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு, ஆஸ்திரேலியாவின் தொடர்ச்சியான ஆதரவை அவர் மீண்டும் உறுதிப்படுத்தினார்.
பிராந்தியத்தில் அமைதி, பாதுகாப்பு மற்றும் செழுமையை மேம்படுத்துவதற்கான நிலைபேறானதொரு ஒத்துழைப்பின் முக்கியத்துவத்தையும் அவர் சுட்டிக்காட்டினார்.
ஆஸ்திரேலிய துணைப் பிரதமர் ரிச்சர்ட் மார்லஸை கௌரவிக்கும் வகையில் ஆஸ்திரேலிய உத்தியோகபூர்வ இல்லத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட சிறப்பு மதிய விருந்துபசாரத்தில் பிரதம விருந்தினராக அழைக்கப்பட்டிருந்த பிரதமரும், பேராசிரியருமான ஹரிணி அமரசூரிய கலந்துகொண்டார்.
கூட்டத்தினரிடையே உரையாற்றிய பிரதமர் ஹரினி அமரசூரிய, இலங்கைக்கும் ஆஸ்திரேலியாவிற்கும் இடையிலான பொருளாதார கூட்டாண்மையை முன்னேற்றுவதன் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார்.
ஆஸ்திரேலியாவுடனான வர்த்தகம் மற்றும் பொருளாதார உறவுகளை மென்மேலும் பன்முகப்படுத்துவதிலும், ஆழப்படுத்துவதிலும் இலங்கையின் ஆர்வத்தையும் அவர் வலியுறுத்தினார்.
அதேவேளை, ரிச்சர்ட் மார்லஸ், பாதுகாப்புப் பிரதி அமைச்சர் அருண ஜயசேகரவுடனும் பயனுறுதிப்பாடு மிக்கதொரு இருதரப்பு கலந்துரையாடலில் ஈடுபட்டார்.
கடல்சார் பாதுகாப்பு மற்றும் இந்தியப் பெருங்கடலில் இடம்பெறும் நாடுகடந்த குற்றவியல் நடவடிக்கைகளை எதிர்த்துப் போராடுவதற்கான முயற்சிகளில கவனம் செலுத்தியதுடன், இரு நாடுகளுக்கும் இடையிலான வலுவானதும், தொடர்ச்சியானதுமான பாதுகாப்பு ஒத்துழைப்பை இச்சந்திப்பு உறுதிசெய்தது.
அதிகரித்து வரும் கடல்சார் சவால்களை திறம்பட எதிர்கொள்ள பகிரப்பட்ட வளங்கள், உளவுத்துறை மற்றும் சிறந்த நடைமுறைகள் மூலம் பிராந்திய மற்றும் சர்வதேச பங்காளிகளிடையே மேம்பட்ட ஒத்துழைப்பின் முக்கியத்துவத்தை இரு தரப்பினரும் அங்கீகரித்தனர்.
பிராந்திய கட்டமைப்புகளுக்குள் ஒத்துழைப்பை ஆழப்படுத்தவும், அறிவுசார் பரிமாற்றம் மற்றும் திறன் மேம்பாட்டில் கூட்டு முயற்சிகளை விரிவுபடுத்தவும் அவர்கள் மேலும் இணங்கினர்.