தென் கொரியாவில் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில், எதிர்க்கட்சியான, லிபரல் கட்சியைச் சேர்ந்த, லீ ஜே மியூங்க் வெற்றிபெற்றுள்ளார்.
தென் கொரியாவில் ஜனாதிபதியாக பதவி வகித்த யூன் சுக் இயோல், கடந்த வருடம் டிசம்பர் 3 ஆம் திகதி இராணுவ அவசர நிலையை அறிவித்திருந்தார்.
இதற்கு எதிராக, நாடாளுமன்றத்தில் உடனடியாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து மேற்படி உத்தரவு மீளப்பெறப்பட்டது.
இதைத் தொடர்ந்து, அவருக்கு எதிராக நாடாளுமன்றத்தில் பதவி நீக்கத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, பதவியில் இருந்து நீக்கப்பட்டார். இதை அந்த நாட்டின் அரசியல் சாசன நீதிமன்றமும், கடந்த ஏப்ரல் 2 ஆம் திகதி உறுதி செய்தது. தற்போது அவர் மீது வழக்குகள் நடந்து வருகின்றன.
எதிர்வரும், 2027 வரை ஜனாதிபதிக்குரிய பதவிக்காலம் உள்ள நிலையில், ஜனாதிபதி பதவியில் இருந்து அவர் நீக்கப்பட்டதால், ஆறு மாதங்களுக்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்ற அரசமைப்பு ஏற்பாட்டுக்கு அமைய தென் கொரியாவில் நேற்று ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்கு பதிவு நடைபெற்றது.
இந்தத் தேர்தலில், பரவலாக எதிர்பார்த்தபடி, எதிர்க்கட்சியான, லிபரல் கட்சியின் வேட்பாளர் லீ ஜே மியூங்க் வெற்றிபெற்று - ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.
அவரை எதிர்த்து போட்டியிட்ட, பழமைவாத கட்சியான மக்கள் சக்தி கட்சியின் கிம் மூன் சூ, தோல்வி அடைந்தார். இந்த தோல்வியை ஒப்புக்கொண்ட அவர், வெற்றி பெற்ற லீ ஜே மியூங்க்கிற்கு வாழ்த்து தெரிவித்தார்.
அதேவேளை, தென்கொரியாவின் புதிய ஜனாதிபதியாக பதவியேற்கவுள்ள லீ ஜே மியூங்கிற்கு ஆஸ்திரேலிய பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இருநாடுகளுக்கும் இடையிலான பொருளாதார, முதலீட்டு மற்றும் பாதுகாப்பு உறவுகளை வலுப்படுத்துவதற்கு அவர் அழைப்பு விடுத்துள்ளார்.