டாஸ்மேனியா பிரீமியர் ஜெர்மி ரொக்கில்ப் இற்கு எதிராக மாநில நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணை நேற்று வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டுள்ளது.
இதனால் விரைவில் தேர்தல் நடத்தப்படவுள்ளது. கடந்த ஏழு ஆண்டு காலப்பகுதிக்குள் டாஸ்மேனியா எதிர்கொள்ளவுள்ள நான்காவது தேர்தல் இதுவாகும்.
டாஸ்மேனியாவில் பிரதான எதிர்க்கட்சியான லேபர் கட்சியாலேயே பிரீமியருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை முன்வைக்கப்பட்டு, அது தொடர்பில் இரு நாட்கள் விவாதம் நடத்தப்பட்டன.
இறுதியில் 18 இற்கு 17 என்ற அடிப்படையில் பிரேரணை நிறைவேற்றப்பட்டுள்ளது.
இதனையடுத்து தேர்தலை நடத்துமாறு ஆளுநரிடம், பிரீமியர் கோரிக்கை விடுத்துள்ளார். எனினும், லேபர் கட்சி ஆட்சியமைப்பதற்குரிய பெரும்பான்மையை நிரூபிக்க முடியுமா முதலில் ஆளுநர் வினவவுள்ளார் எனவும், அதன்பின்னரே தேர்தல் பற்றி முடிவெடுக்கப்படவுள்ளது எனவும் தெரியவருகின்றது.
அதேவேளை, முக்கிய இரு சட்டமூலங்கள் நிறைவேற்றப்பட்ட பிறகு எதிர்வரும் செவ்வாய்க்கிழமை நாடாளுமன்றம் கலைக்கப்படலாம் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
அவ்வாறு கலைக்கப்பட்டால் எதிர்வரும் ஜுலை 19 ஆம் திகதி தேர்தல் நடத்தப்படக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.