அகமதாபாத்தில் இருந்து 242 பேருடன் லண்டன் நோக்கி சென்ற ஏர் இந்தியா விமானம், கீழே விழுந்து நொறுங்கி ஏற்பட்ட பயங்கர விபத்தில் குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானி உட்பட விமானத்தில் சென்ற 241 பேர் உயிரிழந்தனர்.
தரையில் விழுந்த விமானம், மருத்துவ கல்லூரி விடுதியில் மோதியதில், மருத்துவ மாணவர்கள் 10 பேரும் இந்த விபத்தில் பரிதாபமாக உயிரிழந்தனர்.
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள சர்தார் வல்லபபாய் படேல் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து நேற்று பிற்பகல் 1.38 மணிக்கு ஏர் இந்தியா நிறுவனத்தின் பயணிகள் விமானம் லண்டனுக்கு புறப்பட்டது. இதில் 2 விமானிகள், 10 விமான ஊழியர்கள், 230 பயணிகள் என 242 பேர் பயணம் செய்தனர்.
இந்நிலையில், புறப்பட்ட 2 நிமிடங்களில் அகமதாபாத் மெஹானி நகர் குடியிருப்பு பகுதியில் விமானம் விழுந்து நொறுங்கி தீப்பிடித்தது. இதில், விமானத்தில் பயணம் செய்த 241 பேர் உடல் கருகி உயிரிழந்தனர்.
விமான பயணிகளில் 169 பேர் இந்தியர்கள். பிரிட்டனை சேர்ந்த 53 பேர், போர்ச்சுகல் நாட்டை சேர்ந்த 7 பேர், கனடாவை சேர்ந்த ஒருவரும் விமானத்தில் இருந்தனர்.
விமான ஊழியர்கள், பயணிகள் என மொத்தம் உள்ள 242 பேரில், 128 பேர் ஆண்கள், 100 பேர்பெண்கள், 14 பேர் குழந்தைகள் என தெரியவந்தது.
இதற்கிடையே, விமானம் விழுந்து நொறுங்கிய குடியிருப்பு பகுதியில் அரசு மருத்துவ கல்லூரி மாணவர் விடுதி உள்ளது. இங்கு ஏராளமான மருத்துவ மாணவர்கள் மதிய உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்த நேரத்தில், விடுதியின் 4 மாடி கட்டிடம் மீது விமானம் மோதியதில், அந்த கட்டிடம் உடைந்து நொறுங்கியது.
இதில்,இளநிலை, முதுநிலை மருத்துவ மாணவர்கள் 10 பேர் உயிரிழந்தனர். 50-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படுகாயம் அடைந்தனர். இதில் 25 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளனர்.
அதேவேளை, விமான விபத்தில் விஷ்வாஸ் குமார் ரமேஷ் என்ற பயணி அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்துள்ளார். சற்று பதற்றமான நிலையில் இருந்தாலும், மிக சாதாரண விபத்தில் சிக்கியவரை போல வெகு இயல்பாக அவர் நடந்து சென்றார். காலில் லேசாக அடிபட்டிருந்ததால், சற்று தாங்கியபடி சென்றார். அவர் நடந்து செல்லும் காட்சி, வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
விமானத்தின் வால் பகுதியில் கறுப்பு பெட்டி பொருத்தப்பட்டு இருக்கும். விமானிகள், ஊழியர்களின் உரையாடல்கள் அனைத்தும் இதில் பதிவாகும். விமானத்தின் வேகம், பறக்கும் உயரம், திசை, காலநிலை உள்ளிட்ட தகவல்களும் பதிவாகும். பெரும் தீ விபத்து, கடலில் மூழ்கினாலும் கறுப்பு பெட்டிக்கு பாதிப்பு ஏற்படாது.
விபத்துக்குள்ளான விமானத்தின் கறுப்பு பெட்டி மீட்கப்பட்டுள்ள நிலையில், ஆய்வகத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது. இதை ஆய்வு செய்து, அதில் பதிவான தகவல்களை பெற 15 நாட்கள் வரை ஆகும். இதன்பிறகே, விபத்துக்கான உண்மையான காரணம் தெரியும் என்று விமான போக்குவரத்து துறை அதிகாரிகள் கூறினர்.
விமான விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பல்வேறு தலைவர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
ஆஸ்திரேலிய பிரதமர் இரங்கல் தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலிய மக்கள் இந்தியர்களுடன் நிற்கின்றனர் எனவும் அவர் கூறியுள்ளார்.