ஈரான்மீது இஸ்ரேல் இன்று கடும் தாக்குதல் நடத்தியது. இதற்கு அந்நாடு பதிலடி கொடுக்கும் என்பதால் இஸ்ரேலில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
மத்திய கிழக்கில் கடந்த சில ஆண்டுகளாக இஸ்ரேல், ஹமாஸ் இடையேயான போர் தொடர்ந்து வருகிறது.
ஹமாசின் முக்கிய தளபதிகள் அனைவரும் கொல்லப்பட்டுள்ள நிலையில், இந்த மோதல் தற்போது முடிவுக்கு வரும் சூழல் நிலவுகிறது.
இதற்கிடையே மத்திய கிழக்கில் மற்றும் மேலும் அழிவுகரமான இராணுவ மோதல் ஏற்படுவதைத் தடுக்கும் நோக்கில் ஈரானின் அணுசக்தி திட்டத்தைக் கட்டுப்படுத்தும் ஒப்பந்தம் தொடர்பாக அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் நிர்வாகம் பேச்சு நடத்தி வருகிறது.
இதற்கிடையே ஈரான் மீது, குறிப்பாக ஈரானில் அணு ஆயுதங்கள் உள்ள இடங்களில் இஸ்ரேல் தாக்குதல் நடத்தலாம் என்று அமெரிக்க உளவுத்துறை சந்தேகம் தெரிவித்து வந்தது.
இந்நிலையில் ஈரானின் இதயமாக கருதப்படும் அணுசக்தி திட்டங்களை குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தி உள்ளது.
ஈரானின் தெஹ்ரானில் மக்கள் குண்டுவெடிப்பு சத்தத்தைக் கேட்டு அதிர்ச்சியில் மூழ்கி உள்ளனர். அந்நாட்டு அரசு தொலைக்காட்சி குண்டுவெடிப்பை உறுதி செய்துள்ளது.
இந்த சூழலில் ஈரான் பதில் தாக்குதல் நடத்தக்கூடும் என்பதால் இஸ்ரேலில் அவசர நிலை பிரகடனம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.
இதனிடையே ஈரானின் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை உற்பத்தி செய்யும் நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், ஈரான் மீதான தாக்குதல் தொடரும் என்றும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக மேலும் அவர் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், " இஸ்ரேல் ஆபரேஷன் ரைசிங் லயன் என்ற ராணுவ நடவடிக்கையைத் தொடங்கியது, இது இஸ்ரேலின் உயிர்வாழ்விற்கான ஈரானிய அச்சுறுத்தலை முறியடிக்க இலக்கு வைக்கப்பட்ட ராணுவ நடவடிக்கையாகும். இந்த அச்சுறுத்தலை நீக்க இந்த நடவடிக்கை எத்தனை நாட்கள் வேண்டுமானாலும் தொடரும் " என்று பெஞ்சமின் நெதன்யாகு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஈரான் மீது இஸ்ரேல் கடும் தாக்குதல் நடத்தி உள்ள சம்பவத்தால், மத்திய கிழக்கு நாடுகளில் மீண்டும் பதற்றம் அதிகரித்துள்ளது.
இந்நிலையில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலுக்கு நாங்கள் காரணமில்லை என்றும், அமெரிக்காவை குறிவைத்து ஈரான் தாக்குதல் நடத்தக்கூடாது என்றும் அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது.
அதேவேளை, இஸ்ரேல் மற்றும் ஈரானுக்கிடையில் போர் மூண்டுள்ளமை தொடர்பில் ஆஸ்திரேலியா அதிர்ச்சியடைந்துள்ளது என்று வெளிவிவகார அமைச்சர் பெனி வோங் தெரிவித்தார்.
பிராந்திய பதற்றத்துக்கு இது வழிவகுக்கும். எனவே, இராஜதந்திர நடவடிக்கைகளுக்கு முக்கியம் வழங்குமாறும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
ஈரானின் அணுசக்தி திட்டங்கள் சர்வதேச பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாகும். கலந்துரையாடல் மூலம் இப்பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் எனவும் அவர் ஆஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மத்திய கிழக்கு விவகாரம் தொடர்பில் தீவிர அவதானம் செலுத்தப்பட்டுள்ளது எனவும், சூழ்நிலைக்கேற்ப நகர்வுகள் முன்னெடுக்கப்படும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.