போர், வன்முறை மற்றும் சித்திரவதை உள்ளிட்ட காரணங்களால் உலகம் முழுவதும் வெளியேறிய அகதிகளின் எண்ணிக்கை 12 கோடியை தாண்டியுள்ளது.
ஐ.நா. அகதிகள் ஆணையம், உலகளாவிய அகதிகள் நிலவர அறிக்கையை வெளியிட்டுள்ளது. இதில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய உலகம் முழுவதும் வீடுகளை விட்டு வெளியேறி வெளிநாடுகளுக்கு அகதிகளாக சென்றவர்கள் மற்றும் உள்நாட்டுக்குள்ளேயே இடம் பெயர்ந்தவர்கள் எண்ணிக்கை, கடந்த ஏப்ரல் மாத நிலவரப்படி 12 கோடியே 21 லட்சமாக உயர்ந்துள்ளது.
கடந்த ஆண்டு இந்த எண்ணிக்கை 12 கோடியாக இருந்தது. கடந்த 10 ஆண்டுகளில், இது இரட்டிப்பாகி உள்ளது.
கடந்த ஆண்டு இறுதியில் இருந்த நிலவரப்படி, உள்நாட்டிலேயே இடம்பெயர்ந்தவர்கள் எண்ணிக்கை 9 சதவீதம் அதிகரித்து, 7 கோடியே 35 லட்சமாக இருந்தது. இந்த எண்ணிக்கை, பல ஆண்டுகளாக அகதிகளாக மாறியவர்கள் எண்ணிக்கை ஆகும்.
அவர்களில் சிலர் கடந்த ஆண்டு வீடுகளுக்கு திரும்பியபோதிலும், புதிதாக வேறு சிலர் வெளியேறி விட்டனர்.
உள்நாட்டு போரால் பாதிக்கப்பட்ட சூடான் நாட்டில் 1 கோடியே 40 லட்சம் பேர் அகதிகள் ஆகி உள்ளனர். அடுத்தபடியாக, சிரியா நாட்டில் 1 கோடியே 35 லட்சம் பேரும், ஆப்கானிஸ்தான் நாட்டில் 1 கோடி பேரும், உக்ரைன் நாட்டில் 88 லட்சம் பேரும் அகதிகளாக மாறினர்.
அதேவேளை, சூடான், ஆப்பாகிஸ்தான், ஈரான், உக்ரைன், சிரியா மற்றும் இலங்கை உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த அகதிகள், ஆஸ்திரேலியாவிலும் தஞ்சம் அடைந்துள்ளனர்.
அவர்களில் இலங்கையர்கள் உட்பட பல நாடுகளை சேர்ந்தவர்களுக்கு நிரந்தர வதிவிட உரிமை இன்னும் வழங்கப்படவில்லை.
உள்நாட்டு போரால் இடம்பெயர்ந்த இலங்கையர்களுக்கு தற்போதாவது ஆஸ்திரேலியா குடியுரிமையை வழங்க வேண்டும் என்று அகதிகள் சார்ந்த அமைப்பினரும், மனித உரிமை செயற்பாட்டாளர்களும் வலியுறுத்திவருகின்றனர்.
தமக்கு நிரந்தர குடியுரிமை வழங்குமாறு வலியுறுத்தி ஆஸ்திரேலியாவில் வாழும் புகலிடக்கோரிக்கையாளர்கள் தொடர்ச்சியாக வேண்டுகோள் விடுத்துவருகின்றனர். தடுப்பு நிலையங்களில் உள்ளவர்களும் தமக்கான நீதியை எதிர்பார்த்துள்ளனர்.