கனடாவில் நடைபெறும் ஜி – 7 மாநாட்டின்போது அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானீஸி ஆகியோருக்கிடையில் இரு தரப்பு சந்திப்பு நடைபெறுமா என்பது தற்போது கேள்விக்குறியாக மாறியுள்ளது.
இஸ்ரேலின் இரு அமைச்சர்களுக்கு எதிராக ஆஸ்திரேலியா பயண மற்றும் பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளமை தொடர்பில் அமெரிக்கா கடும் அதிருப்தி வெளியிட்டுள்ளது.
அதேபோல ஆஸ்திரேலியா பாதுகாப்பு செலவீனங்களை அதிகரிக்க வேண்டும் என அமெரிக்கா யோசனை முன்வைத்த நிலையில், அது தொடர்பில் ஆஸ்திரேலிய பிரதமர் அதிருப்தி வெளியிட்டிருந்தார்.
பாதுகாப்பு தொடர்பில் சொந்த முடிவையே ஆஸ்திரேலியா எடுக்கும் என அவர் சுட்டிக்காட்டி இருந்தார்.
கன்பராவின் இந்த நகர்வும் ட்ரம்ப் நிர்வாகத்தை கொதிப்படைய வைத்தது.
இவ்வாறானதொரு பின்புலத்திலேயே இரு நாட்டு தலைவர்களுக்கும் இடையிலான இரு தரப்பு சந்திப்பு இரத்து செய்யப்படக்கூடும் என தகவல் வெளியாகியுள்ளது.
இரும்பு மற்றும் அலுமினியம் மீதான வரி, ஆஸ்திரேலிய நிருபர்மீதான ரப்பர் தோட்டா தாக்குதல் உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பில் ட்ரம்ப்புடன் பேச்சு நடத்த , ஆஸி. பிரதமர் திட்டமிட்டிருந்தார்.
ஜ7 மாநாடு எதிர்வரும் 15 ஆம் திகதி முதல் 17 ஆம் திகதிவரை கனடாவில் நடைபெறுகின்றது. இம்மாநாடு உட்பட முக்கிய சந்திப்புகளுக்காக ஆஸ்திரேலிய பிரதமர் இன்று வட அமெரிக்காவுக்குரிய பயணத்தை ஆரம்பிக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.