புலி ஆதரவாளர்களால் தயாரிக்கப்பட்ட நிகழ்ச்சி நிரலுக்குள் இலங்கை அரசாங்கத்தை சிக்கவைக்கும் நோக்கிலேயே ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் இலங்கை வந்திருந்தார் - என்று தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்தார்.
கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
" இலங்கை தொடர்பில் தீர்க்கமான முடிவுகளை எடுப்பதற்கு முன்னரே ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர்கள் இங்கு வந்திருக்கின்றனர்ஸ்ரீ. தம்மால் எடுக்கப்படும் பாரதூரமான முடிவுகள் சரியானவை என்பதை காண்பித்துக்கொள்வதே இதன் நோக்கம்.
அதாவது தாம் இலங்கைக்கு சென்றதாகவும், பல தரப்பினரை சந்தித்து கலந்துரையாடியதாகவும், அதற்கமையவே அறிக்கை தயாரிக்கப்பட்டது கூறிக்கொள்வதே அவர்களின் எண்ணம். இதற்கு முன்னரும் இதுவே நடந்துள்ளது. நவநீதம் பிள்ளை, அல்உசைன் ஆகியோரும் வந்தனர். அனைத்து தரப்பினரையும் சந்தித்தோம் எனக் கூறினாலும் பிரிவினைவாதிகளையும், அடிப்படை வாதிகளையுமே மட்டுமே சந்தித்தனர். அவர்களை திருப்திப்படுத்தும் விதத்திலேயே அறிக்கையும் வெளிவந்தது.
தற்போதைய ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளரும் அதே வழியில்தான் வந்துள்ளார். யாழுக்கு சென்று உயிரிழந்தவர்களையும் நினைவுகூர்ந்துள்ளார். வடக்கில் உள்ளவர்கள் மட்டுமா இறந்தனர்? புலிகளால் மக்கள் கொல்லப்படவில்லையா? வடக்கில் படையினரின் உடல்கள் இல்லையா? கொல்லப்பட்ட பொலிஸாரின் உடல்கள் இல்லையா?
புலிக்கொடியுடன்தான் நபர்கள் செம்மணி வந்திருந்தனர். அங்கு சென்று ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் அஞ்சலி செலுத்தி, ஆன்மீக நிகழ்விலும் பங்கேற்றுள்ளார்.
பாதுகாப்பு தரப்பில் இருந்த முன்னாள் அதிகாரிகள் இணைந்து ஐ.நா. மனித உரிமையாளரை சந்திப்பதற்கு அனுமதி கோரி இருந்தனர். அதற்கு அனுமதி வழங்கப்படவில்லை. சில சட்டத்தரணிகள் குழுவும் கோரி இருந்தது. அந்த கோரிக்கையும் ஏற்கப்படவில்லை. தேசிய வாத அமைப்புகளுக்கும் இடமளிக்கப்படவில்லை. மாறாக புலிகளின் சித்தாந்தத்துடன் இன்றும் செயற்படும் நபர்களுடன் மட்டுமே சந்திப்பு நடந்துள்ளது.
புலி ஆதரவாளர்களின் தேவைக்கேற்ப தயாரிக்கப்பட்டுள்ள அறிக்கைக்கு இலங்கையை சிக்க வைக்கும் நோக்கிலேயே ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் வந்துள்ளார்." - என்றார்.