உக்ரைனுக்கு எதிராக ஒரே இரவில் மிகப் பெரிய வான்வழித் தாக்குதலை ரஷ்யா நடத்தியது. இதில் 477 ட்ரோன்கள் மற்றும் 60 ஏவுகணைகள் உட்பட மொத்தம் 537 வான்வழி ஆயுதங்களை ரஷ்யா வீசியது. இந்த தாக்குதலில் ஒரு குழந்தை உட்பட 6 பேர் காயமடைந்தனர்.
இரவு நடந்த மிகப் பெரிய வான்வழித் தாக்குதல் உக்ரைன் முழுவதும் உள்ள பகுதிகளை இலக்காகக் கொண்டு தாக்கியது என்று உக்ரைன் விமானப்படையின் தகவல் தொடர்புத் தலைவர் யூரி இஹ்னாட் தெரிவித்தார்.
மேலும், இந்த தாக்குதலின் போது ட்ரோன்கள், பாலிஸ்டிக் மற்றும் க்ரூஸ் ஏவுகணைகள் உட்பட சுமார் 500 வகையான வான்வழி ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டதாக உக்ரைன் ராணுவம் தெரிவித்தது.
அதேவேளை, உக்ரைன்மீதான ரஷ்யாவின் தாக்குதலை ஆஸ்திரேலியா தொடர்ச்சியாக கண்டித்துவருகின்றது.
அத்துடன், சட்டவிரோத போரை ரஷ்யா முடிவுக்கு கொண்டுவர வேண்டும் எனவும் வலியுறுத்திவருகின்றது. அதேபோல ரஷ்யாவின் பல நிறுவனங்கள் மற்றும் தனி நபர்களை இலக்கு வைத்து ஆஸ்திரேலியா தடைகளையும் விதித்துள்ளது.
உக்ரைனுக்கு பாதுகாப்பு ரீதியிலான ஒத்துழைப்புகளையும் வழங்கிவருகின்றது. ஜி - 7 மாநாட்டின்போதுகூட ஆதரவு உறுதிப்படுத்தப்பட்டது.