நச்சுக் காளானை சமைத்துக்கொடுத்து மூவரை கொலைசெய்தார் எனக் கூறப்படும் பெண் குற்றவாளியென அறிவிக்கப்பட்டுள்ளது. அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
குற்றவாளியென நேற்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ள 50 வயதான எரின் பாட்டர்சன், நேற்றிரவு பொழுதை சிறையில் கழித்தார். இந்நிலையில் வாழ்நாள் முழுவதையும் இனி அவர் சிறையிலேயே கழிக்க நேரிடும் எனக் கூறப்படுகின்றது.
2023 ஜுலை 29 ஆம் திகதியே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
தனது முன்னாள் கணவரின் பெற்றோர் மற்றும் சகோதரி ஆகியோருக்கே இவர், நச்சுக்காளானை சமைத்துக் கொடுத்துள்ளார்.
இதனால் கடுமையாக பாதிக்கப்பட்ட அவர்கள், வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்றுவந்த நிலையில் உயிரிழந்தனர்.
இதனையடுத்து எரின் பாட்டர்சன்மீது கொலைக்குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டு, விசாரணைகள் இடம்பெற்றுவந்தன.
ஜூரி குழு ஏழு நாட்கள் ஆலோசனை செய்த பிறகு, விக்டோரியாவின் மொர்வெல் நகரில் 11 வாரங்கள் நீடித்த வழக்கின் முடிவில், எரின் பாட்டர்சன குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டது.
இத்தீர்ப்பு வழங்கப்பட்ட பின்னர் பாட்டர்சன் மெல்பேர்ண் சிறைச்சாலைக்கு அழைத்து செல்லப்பட்டார். இதன்போது நீதிமன்ற வளாகத்தில் அவரை நோக்கி கொலைக்காரி என கோஷங்கள் எழுப்பட்டன.
மூன்று கொலைக்குற்றச்சாட்டுகள் மற்றும் கொலை முயற்சி தொடர்பில் இவருக்கான தண்டனை விரைவில் வழங்கப்படவுள்ளது. அது பெரும்பாலும் ஆயுள் தண்டனையாக இருக்குமென கருதப்படுகின்றது.