ஆஸ்திரேலியாவானது, அமெரிக்காவைவிட சீனாவுடன் வலுவான பொருளார உறவுகளைப் பேண வேண்டும் என பெரும்பான்மையான ஆஸ்திரேலியர்கள் விரும்புகின்றனர் என ஆய்வொன்றில் தெரியவந்துள்ளது.
வாஷிங்டனை தளமாகக்கொண்ட பியூ ஆராய்ச்சி நிலையத்தால் வெளியிடப்பட்ட ஆய்விலேயே இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க ஜனாதியினர் வர்த்தக போருக்கு மத்தியிலேயே இவ்வாய்வு நடத்தப்பட்டுள்ளது.
24 நாடுகளில் பியூ ஆராய்ச்சி நிறுவனம் நடத்திய சமீபத்திய ஆய்வில், அமெரிக்கா மற்றும் அந்நாட்டு ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மீதான கருத்துகள் மோசமடைந்துள்ளன.
அத்துடன், சீனா மற்றும் அந்நாட்டு ஜனாதிபதி ஜி ஜின்பிங் தொடர்பில் உலகளவில் சாதகமான கருத்துகள் தோற்றம் பெற்றுள்ளன.
கருத்து கணிப்புக்கு உட்படுத்தப்பட்ட ஆஸ்திரேலியர்களில் 53 சதவீதமானோர் - சீனாவுடனான பொருளாதார உறவுகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதை விரும்புவதாகக் கூறியுள்ளனர். இது 2021 இல் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுடன் ஒப்பிடுகையில் 39 சதவீத அதிகரிப்பாகும்.
எனினும், பொருளாதாரம்தவிர்ந்த ஏனைய விடயங்களில் ஆஸ்திரேலியர்கள், சீனாவை நம்பவில்லை. ஆய்வுக்குட்படுத்தப்பட்ட ஆஸ்திரேலியர்களில் 76 சதவீதமானோர் சீனாவை எதிர்மறையாகவே பார்க்கின்றனர். 23 சதவீதமானோர் மட்டுமே சாதக கண்ணோட்டத்தில் உள்ளனர் எனவும் ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
உலக விவகாரங்களில் சீன ஜனாதிபதி சரியானதையே செய்வார் என 17 சதவீதமான ஆஸ்திரேலியர்களே கருதுகின்றனர். இது விடயத்தில் அவர்மீது நம்பிக்கை இல்லை என 77 சதவீத ஆஸ்திரேலியர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.