ஆக்கஸ் ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா வெளியேறக் கூடாது என்று ஆஸ்திரேலியாவின் முன்னாள் பிரதமர் ஸ்கொட் மொரிசன் தெரிவித்தார்.
ஆஸ்திரேலியா, பிரிட்டன் மற்றும் அமெரிக்காவுக்கிடையிலான பாதுகாப்பு ஒப்பந்தமே ஆக்கஸ் எனப்படுகின்றது. குறித்த ஒப்பந்தத்தை ட்ரம்ப் நிர்வாகம் தற்போது மீளாய்வு செய்துவருகின்றது.
சீனாவின் செல்வாக்கை எதிர்த்து போராடுவதற்கான தமது முயற்சிகளுக்கு மேற்படி ஒப்பந்தம் தடையாக இருக்கும் என அமெரிக்கா கருதுகின்றது.
ஆக்கஸ் ஒப்பந்தம் உருவாக்கத்தில் ஸ்கொட் மொரிசன் முக்கிய வகிபாகத்தை வகித்தார்.
2018 முதல் 2022 வரை அவர் பிரதமராக இருந்த காலகட்டத்தில் பீஜிங் மற்றும் கன்பராவுக்கிடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டது. ஆஸ்திரேலிய பொருட்களுக்கு சீனா கூடுதல் வரிகளை விதிப்பதற்கு இதுவும் ஒரு காரணமாக அமைந்தது.
எனினும், அல்பானீஸி ஆட்சியின்கீழ் சீனாவுடனான உறவு சீர்செய்யப்பட்டுவருகின்றது. கடந்தவாரம் பிரதமர் பீஜிங்குக்கு பயணம் மேற்கொண்டு இரு தரப்பு சந்திப்புகளில் ஈடுபட்டார்.
இந்நிலையில் அமெரிக்க காங்கிரஸ் குழுவில் முன்னிலையாகி உரையாற்றுகையிலேயே, ஸ்கொட் மொரிசன் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.