புதிய அரசியலமைப்பை இயற்றுவதற்குரிய ஆரம்பக்கட்ட நடவடிக்கை ஆரம்பமாகியுள்ளது. இது விடயத்தில் இரகசிய நடவடிக்கை எதுவும் இல்லை. வெளிப்படை தன்மையுடனேயே நடவடிக்கை இடம்பெறும் என்று பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் நேற்று ஐக்கிய மக்கள் சக்தியின் எம்.பி., அஜித் பி பெரேராவால், புதிய அரசியலமைப்பு தொடர்பில் எழுப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
'அரசியலமைப்பென்பது நாட்டின் அடிப்படை சட்டம். எனவே, உரிய ஆய்வு , கண்காணிப்பு மற்றும் மக்கள், நிபுணர்கள் உட்பட பல தரப்பினரதும் கருத்துகளை உள்வாங்காமல் அதற்குரிய பணிகளை குறுகிய காலப்பகுதிக்குள் செய்வது சாத்தியமற்ற விடயமாகும்.
புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர் புதிதாக 8 சட்டங்கள் இயற்றப்பட்டுள்ளன. மேலும் சில சட்டங்கள், சட்டவரைவுகளாக உள்ளன. உடனடியாக தீர்வை வழங்கக்கூடிய துறைகள் தொடர்பில் அவதானம் செலுத்தியே இதற்குரிய நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது." எனவும் பிரதமர் சுட்டிக்காட்டினார்.
எனவே, எமது ஆட்சிகாலத்துக்குள் புதிய அரசியலமைப்பை இயற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். இதற்குரிய ஆரம்பக்கட்ட நடவடிக்கை தற்போது ஆரம்பமாகியுள்ளது.
புதிய அரசியலமைப்பு இயற்றும் நடவடிக்கையின்போது அனைத்து தரப்பினரினதும் கருத்துகள் மற்றும் யோசனைகளுக்கு மதிப்பளிக்கப்படும்.
மக்களால் ஏற்றுக்கொள்ளப்படும் அரசியலமைப்பாக அது அமையும். புதிய அரசியலமைப்புக்காக இதற்கு முன்னர் நியமிக்கப்பட்ட குழுக்களின் பரிந்துரைகளும் கருத்திற்கொள்ளப்படும்.
எனவே, இதற்கு சிறிது காலம் எடுக்கும தேர்தல் விஞ்ஞாபனத்தில் வழங்கப்பட்டுள்ள வாக்குறுதிக்குமைய நிச்சயம் நடவடிக்கை இடம்பெறும்." - என பிரதமர் ஹரினி அமரசூரிய மேலும் குறிப்பிட்டார்.