“ஹமாஸ் படையினர் இறக்க விரும்புகின்றனர். அமைதியை நிலைநாட்ட எந்த ஆர்வமும் காட்டவில்லை” என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் படையினருக்கு இடையே போர் நடந்து வருகிறது. இதனால் காசாவில் இஸ்ரேல் வான்வழி தாக்குதல் நடத்தி வருகிறது.
இதில் பாலஸ்தீனர்கள் ஆயிரக்கணக்கில் கொல்லப்பட்டு உள்ளனர். அமெரிக்க ஜனாதிபதியாக டிரம்ப் பொறுப்பேற்ற முதல் நாளில் இருந்து, ஹமாஸ்- இஸ்ரேல் இடையே நடந்து வரும் போரை முடிவுக்கு கொண்டு வர தீவிரம் காட்டினார்.
அமெரிக்க ஆதரவுடன் கூடிய போர் நிறுத்த திட்டத்தை ஹமாஸ் நிராகரித்தது.
இந்நிலையிலேயே ட்ரம்ப் மேற்கண்டவாறு எச்சரித்துள்ளார்.
ஹமாஸ் போராளிக் குழுவிற்கு அமைதியை நிலைநாட்ட எந்த ஆர்வமும் இல்லை. ஹமாஸ் உண்மையில் ஒரு ஒப்பந்தம் செய்ய விரும்பவில்லை. அவர்கள் இறக்க விரும்புகிறார்கள் என்று நான் நினைக்கிறேன். இது மிக மிக மோசமானது. நீங்கள் வேலையை முடிக்க வேண்டிய ஒரு கட்டத்திற்கு அது சென்றிருக்க வேண்டும்.
அனைத்து பிணைக் கைதிகளையும் விடுவித்த பிறகு என்ன நடக்கும் என்று அவர்களுக்கு தெரியும். இதனால் பிணைக்கைதிகளை விடுவிக்கும் ஒப்பந்தங்களை ஹமாஸ் ஏற்றுக்கொள்ள விரும்பவில்லை. ஹமாஸ் குழுவின் தலைவர்கள் இப்போது வேட்டையாடப்படுவார்கள். இஸ்ரேல் போராடி தனது வேலையை முடிக்க வேண்டும்.” – எனவும் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.