காசாவில் மனிதாபிமான உதவிகளை தடுப்பதன்மூலம் இஸ்ரேல் சர்வதேச சட்டத்தை மீறுகின்றது என்று பிரதமர் அந்தோனி அல்பானீஸி முன்வைத்துள்ள கூற்றுக்கு பிரதான எதிர்க்கட்சியான கூட்டணி கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளது.
முடிந்தால் ஆதாரத்துடன் உண்மையை வெளிப்படுத்துங்கள் என்று கூட்டணியின் முன்னணி நாடாளுமன்ற உறுப்பினரான டான் டெஹான், பிரதமருக்கு சவால் விடுத்துள்ளார்.
இஸ்ரேல் காசாவிற்கு மனிதாபிமான நிவாரணம் வழங்க முயற்சிக்கிறது. எனினும், அந்த முயற்சிகளை ஹமாஸ் தொடர்ந்து சீர்குலைத்துவருகின்றது எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
சர்வதேச அளவில் பட்டியலிடப்பட்ட பயங்கரவாத அமைப்பான ஹமாஸ்தான் பெரும் பிரச்சினையாக இருந்துவருகின்றது. எனவே, ஹமாஸ் அகற்றப்படும் வரை மோசடி நிலை தொடரவே செய்யும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை , காசாவில் மக்கள் அடர்த்தி மிக்க மூன்று பகுதிகளில் மக்கள் உணவின்றி பட்டினியால் தவிப்பதால் அங்கு நாள்தோறும், 10 மணிநேர சண்டை நிறுத்தத்தை இஸ்ரேல் இராணுவம் அறிவித்துள்ளது.
ஹமாஸ் கட்டுப்பாட்டில் இருந்து காசாவை முழுமையாக மீட்கும் முயற்சியில் மேற்காசிய நாடான இஸ்ரேலின் இராணுவம் தொடர் தாக்குதல் நடத்தி வருகிறது.
இந்த தாக்குதலில் இதுவரை 60 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். ஒன்றரை ஆண்டுக்கு மேலாக நீடிக்கும் போரால் மக்கள் உணவு, குடிநீர் தட்டுப்பாட்டால் அவதிப்படுகின்றனர்.
இந்நிலையில், போதிய உணவு கிடைக்காமல் காசாவில் பட்டினி பிரச்னை பெரிய அளவில் உருவெடுத்துள்ளதால், இஸ்ரேலுக்கு சர்வதேச அளவில் அழுத்தம் ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து காசா சிட்டி, டெய்ர் அல்- பலாஹ் மற்றும் முவாசி ஆகிய மக்கள் அடர்த்தி நிறைந்த மூன்று பகுதிகளில் தினமும் காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை 10 மணி நேரம் போர் நிறுத்தத்தை அறிவித்துள்ளது.