பாலியல் துஷ்பிரயோக வழக்கில் குற்றவாளியென தீர்ப்பளிக்கப்பட்டுள்ள மாநில எம்.பி. கேரத் வார்டூ, நாடாளுமன்றத்தில் இருந்து வெளியேற வேண்டும் என்று நியூ சவூத் வேல்ஸ் மாநில பிரீமியர் வலியுறுத்தினார்.
44 வயதான கேரத் வார்டூ என்ற எம்.பியே இவ்வாறு குற்றவாளியென நிரூபிக்கப்பட்டு, விரைவில் தண்டனையை எதிர்கொள்ளவுள்ளார்.
2013 ஆம் ஆண்டில் 18 வயது இளைஞர் ஒருவரை தனது வீட்டுக்கு அழைத்து துஷ்பிரயோகத்துக்குட்படுத்தினார் என இவர்மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.
நாடாளுமன்ற உறுப்பினர் தனக்கு மது வழங்கிவிட்டு, பின்னர் பலவந்தமாக வல்லுறவுக்குட்படுத்தினார் என குறித்த இளைஞர் முறைப்பாடு செய்துள்ளார்.
அதன்பின்னர் 2015 ஆம் ஆண்டிலும் அவர் பாலியல் துஷ்பிரயோகத்தில் 24 வயது இளைஞர் ஒருவரை, துஷ்பிரயோகத்துக்குட்படுத்தியுள்ளார்.
இது தொடர்பில் வழக்கு விசாரணை இடம்பெற்று வந்த நிலையிலேயே, சம்பந்தப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் குற்றவாளியென, ஜுரிகள் முடிவெடுத்துள்ளனர்.
இவருக்கான தண்டனை தீர்ப்பு விரைவில் வழங்கப்படவுள்ளது. இந்நிலையிலேயே பிரீமியர் இவ்வாறு வலியுறுத்தியுள்ளார்.
' சுயாதீன நாடாளுமன்ற உறுப்பினரை நாடாளுமன்றத்திலிருந்து நீக்க சட்டமன்றத்திற்கு அதிகாரம் உள்ளது. இது பற்றி ஆலோசனை நடத்தப்பட்டுவருகின்றது. " என்று பிரீமியர் கிறிஸ் மின்ஸ் இன்று தெரிவித்தார்.
அத்துடன், இவர் பதவி விலக வேண்டும் என்று மாநில எதிர்க்கட்சி தலைவரும் வலியுறுத்தியுள்ளார்.
நாடாளுமன்றம் அடுத்தவாரம் கூடும்போது, அவரை பதவி நீக்குவதற்குரிய ஏற்பாடுகள் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.