ஆஸ்திரேலியாவில் தஞ்சமடைந்துள்ள அகதிகளுக்கு நிரந்தர பாதுகாப்பு விசா வழங்குவதற்கு ஒத்துழைப்பு நல்குமாறு ஆளுங்கட்சி அரசியல் வாதிகளிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Displaced Workers Collective எனும் அமைப்பின் பிரதிநிதிகளான திரு. தனு, திருமதி ரதி ஆகியோர் நாடாளுமன்றம் சென்று, எம்.பிக்கள், அமைச்சர்கள் மற்றும் செனட்டர்களை சந்தித்து, கலந்துரையாடியுள்ளனர்.
ஆஸ்திரேலியாவில் தஞ்சமடைந்துள்ள அகதிகளின் நிலை பற்றியும், அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் சம்பந்தமாகவும், விசா வழங்கப்பட வேண்டியதன் அவசியத்துவம் குறித்தும் எடுத்துரைத்துள்ளனர்.
அத்துடன், கடந்தகாலங்களில் அகதிகளுக்கு இழைக்கப்பட்டுள்ள அநீதிகள் மற்றும் அதனால் ஏற்பட்ட உயிரிழப்புகள் சம்பந்தமாகவும் விவரிக்கப்பட்டுள்ளது.
இது சம்பந்தமாக அடுத்த நாடாளுமன்ற அமர்வின்போது குரல் எழுப்படும் என அரசியல் பிரமுகர்களால் உறுதியளிக்கப்பட்டுள்ளது.
'அரசியல் வாதிகளை முழுமையாக நம்பிவிட முடியாது. அவர்கள் குரல் கொடுப்பதாக கூறினாலும் அதனை செய்வார்களா என்பது சந்தேகமே. எனவே, அகதிகளுக்காக செயற்படும் அனைவரும் தொடர்ந்து போராட வேண்டும். குரல் எழுப்ப வேண்டும். அப்போதுதான் எமக்கான தீர்வு கிடைக்கும்." என்று அகதிகளுக்கான செயற்பாட்டாளரான ரதி தெரிவித்தார்.
அதேவேளை, அகதிகளுக்கு விசா வழங்குமாறுகோரி தொடர்ச்சியாக சுழற்சி முறையில் 100 நாள்கள் போராட்டம் இடம்பெற்றமையும் குறிப்பிடத்தக்கது.