பாலஸ்தீனத்துக்கு கனடாவும் அங்கீகாரம்: ஆஸி. கிறீன்ஸ் கட்சியும் பேராதரவு!
ஆஸ்திரேலியா பாலஸ்தீனத்தை அங்கீகரிக்க வேண்டும் என்று கிறீன்ஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது.
இது விடயத்தில் பிரான்ஸ், இங்கிலாந்து மற்றும் கனடா ஆகிய நாடுகளின் வழியை ஆஸ்திரேலியா பின்பற்ற வேண்டும் என்று சாரா ஹான்சன்-யங் தெரிவித்தார்.
எதிர்வரும் செப்டம்பர் மாதம் நடைபெறவுள்ள ஐ.நா. பொதுச்சபைக் கூட்டத்தொடரின்போது இதற்குரிய முடிவை ஆஸ்திரேலியா எடுக்க வேண்டுமா என்பது பற்றி அவர் எதுவும் குறிப்பிடவில்லை.
' காசாவில் சட்டவிரோத ஆக்கிரமிப்பு முடிவுக்கு கொண்டுவரப்பட வேண்டும். அப்பாவி மக்கள் கொல்லப்படுவது நிறுத்தப்பட வேண்டும். அதேபோல ஆஸ்திரேலியா தனது இராஜதந்திர முடிவுகளை துணிந்து எடுக்க வேண்டும்." - எனவும் செனட்டர் சாரா ஹான்சன்-யங் குறிப்பிட்டார்.
அதேவேளை, இஸ்ரேல்மீது தடைகள் விதிக்கப்பட வேண்டும் எனவும் கிறீன்ஸ் கட்சியினர் வலியுறுத்திவருகின்றனர்.
இதற்கிடையில் பாலஸ்தீனத்தை எதிர்வரும் செப்டம்பர் மாதம் அங்கீகரிக்கப்போவதாக கனடா அறிவித்துள்ளது.
பிரான்ஸ் மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகள் மேற்படி முடிவை எடுத்துள்ளதற்கு இஸ்ரேல் ஏற்கனவே கடும் அதிருப்தி வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.