சிட்னி துறைமுக பாலம் வழியாக பாலஸ்தீன ஆதரவாளர்களால் நாளை (03) முன்னெடுக்கப்படவுள்ள பேரணிக்கு நீதிமன்றம் ஊடாக தடை உத்தரவு பெறும் நியூ சவூத் வேல்ஸ் பொலிஸாரின் முயற்சி தோல்வியில் முடிந்துள்ளது.
" காசாவில் நிலவும் பயங்கரமான சூழ்நிலை தொடர்பில் உலக மக்களிடமிருந்து அவசர பதில் தேவைப்படுகிறது என்ற நம்பிக்கையால் இந்த இடத்தில் அணிவகுப்பு நடத்தப்படுகிறது." என்று நியூ சவுத் வேல்ஸ் உச்ச நீதிமன்ற நீதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.
இப்பேரணியால் சிட்னி துறைமுக பாலம் நாளை முற்பகல் 11 மணி முதல் 5 மணிநேரம் மூடப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அத்துடன், ஆயிரக்கணக்கானோர் பேரணியில் பங்கேற்பதால் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது.
பேரணியை நடத்துவதற்கு அனுமதி கோரி ஏற்பாட்டாளர்களால் நியூ சவூத் வேல்ஸ் பொலிஸாரிடம் அனுமதி கோரப்பட்டிருந்தது. இதற்கு காவல்துறை தரப்பு அனுமதி வழங்கவில்லை. நியூ சவூத் வேல்ஸ் மாநில அரசும் போர்க்கொடி தூக்கி இருந்தது.
எனினும், போராட்டம் நடத்தப்படும் என பாலஸ்தீன ஆதரவு நடவடிக்கை குழு அறிவித்தது. இதனையடுத்து உச்ச நீதிமன்றம் ஊடாக தடை உத்தரவு பெறும் முயற்சியில் பொலிஸார் இறங்கினர்.
குறித்த பேரணியால் போக்குவரத்து தடை படும் எனவும், 40 ஆயிரம் வரையிலான சாரதிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் எனவும் பொலிஸ் தரப்பில் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது. எனினும், போராட்டக்காரர்களின் விண்ணப்பத்தை நிராகரிக்க நீதிமன்றம் மறுத்துவிட்டது.