பூர்வக்குடி குழந்தைகள், இளைஞர்களுக்கான புதிய தேசிய ஆணையாளர் நியமனம்!
பூர்வக்குடி குழந்தைகள் மற்றும் இளைஞர்களுக்கான புதிய தேசிய ஆணையாளராக துணைப் பேராசிரியர் சூ ஆன் ஹண்டர் நியமிக்கப்பட்டுள்ளார்.
இவ்வருட இறுதி முதல் அவர் தமது பணியை பொறுப்பேற்பார் என் அறிவிக்கப்பட்டுள்ளது.
பூர்வக்குடி குழந்தைகள் வீட்டுக்கு வெளியில் பராமரிப்பில் இருப்பதற்கான வாய்ப்பு 10 மடங்காக அதிகரித்துள்ளது. அத்துடன், பூர்வக்குடி இளைஞர்கள் காவலில் வைக்கப்படும் எண்ணிக்கையும் பல மடங்கு அதிகரித்துள்ளது.
அதேபோல பூர்வக்குடி சிறார்கள் மற்றும் இளைஞர்கள் தொடர்பான தேசிய இலக்குகள் தொடர்ந்து பின்நோக்கிச் செல்கின்றன.
இவ்வாறானதொரு பின்புலத்திலேயே இவற்றை நிவர்த்தி செய்யும் நோக்கில் லேபர் அரசால் இப்புதிய நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
குழந்தைகள் மற்றும் குடும்ப நல சேவையில் இரு தசாப்தங்களுக்கு மேலான அனுபவத்தை துணைப் பேராசிரியர் சூ ஆன் ஹண்டர் கொண்டுள்ளார். சிறந்த சமூக சேவகராகவும் பார்க்கப்படுகின்றார். யூறுக் நீதி ஆணைக்குழுவின் துணைத் தலைவராகவும் பதவி வகித்துள்ளார்.
பூர்வக்குடி குழந்தைகளுக்கு ஏனைய குழந்தைகளைப் போலவே சமமான வாய்ப்புகள் கிடைப்பதை உறுதி செய்வதில் இன்னும் பலவற்றைச் செய்ய வேண்டும் என்பதை அரசாங்கம் அங்கீகரிப்பதை இந்நியமனம் பிரதிபலிக்கிறது என்று சமூக சேவைகள் அமைச்சர் தெரிவித்தார்.