பாலஸ்தீனத்தை அங்கீகரிப்பது தொடர்பான காலக்கெடுவை வழங்குவதற்கு பிரதமர் அந்தோனி அல்பானீஸி மறுத்துள்ளார்.
எதிர்வரும் செப்டம்பர் மாதம் நடைபெறும் ஐ.நா. பொதுச்சபைக் கூட்டத்தொடரில் பாலஸ்தீனம் தனி நாடாக அங்கீகரிக்கப்படும் என பிரான்ஸ், பிரிட்டன் மற்றும் கனடா உள்ளிட்ட நாடுகள் அறிவித்துள்ளன.
இந்நிலையில் பாலஸ்தீன மக்களின் விடுதலைக்காகவும், இஸ்ரேலின் போரை கண்டித்தும் ஆஸ்திரேலியா, சிட்னியில் நேற்று மாபெரும் பேரணி இடம்பெற்றது.
சிட்னி துறைமுகம் பாலத்தில் இடம்பெற்ற அணிவகுப்பில் ஒரு லட்சம் வரையானோர் பங்கேற்றனர். எனினும், போராட்டத்தின்போது எவ்வித வன்முறையும் இடம்பெறவில்லை. கைது சம்பவங்களும் பதிவாகவில்லை.
இந்நிலையில் அமைதியாக முன்னெடுக்கப்படும் போராட்டங்களை தான் ஆதரிப்பதாக பிரதமர் அந்தோனி அல்பானீஸி தெரிவித்தார்.
எனினும், பாலஸ்தீனத்தை அங்கீகரிப்பது தொடர்பான கேள்விகளுக்கு அவர் நேரடி பதிலை வழங்கவில்லை.
பாலஸ்தீனம் தனி நாடாக அங்கீகரிக்கப்படும்வரை ஆயுதப் போராட்டத்தை கைவிடப்போவதில்லை என ஹமாஸ் அறிவித்துள்ளது.
" பாலஸ்தீன அரசாங்கத்தில் ஹமாஸின் எந்தவொரு பங்களிப்பையும் ஆஸ்திரேலியா ஆதரிக்காது." - என்று பிரதமர் அல்பானீஸி குறிப்பிட்டார்.
சிட்னியில் நேற்று நடைபெற்ற பேரணியில் லேபர் கட்சியினரும் பங்கேற்றிருந்தனர்.
பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிக்கும் அறிவிப்பை பிரதமர் வெளியிட வேண்டும் என்று மேற்கு சிட்னியின் லேபர் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் எட் ஹுசிக் அழைப்பு விடுத்தார்.