டாஸ்மேனியாவில் ஏற்பட்டிருந்த அரசியல் குழப்பம் முடிவுக்கு வரும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. அரசியல் கொந்தளிப்புகளுக்கு மத்தியில் அங்கு மீண்டும் ஆட்சியமைப்பதற்குரிய வாய்ப்பை லிபரல் கட்சி கோரியுள்ளது.
பிரீமியர் ஜெர்மி ராக்லிப் இன்று ஆளுநர் மாளிகையில், ஆளுநரை சந்தித்து ஆட்சியமைப்பதற்குரிய கோரிக்கையை அதிகாரப்பூர்வமாக விடுத்துள்ளார்.
நாடாளுமன்றத்தின் நம்பிக்கையை பெற முடியும் என பிரீமியர் உறுதியளித்ததையடுத்து அவரின் கோரிக்கை ஏற்கப்பட்டது என ஆளுநர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த மாதம் நடைபெற்ற மாநில நாடாளுமன்றத் தேர்தலில் லிபரல் கட்சி 14 ஆசனங்களைப் பெற்றிருந்தது.
ஆட்சியமைப்பதற்குரிய அறுதிப்பெரும்பான்மையை பெறுவதற்கு 18 ஆசனங்களைப் பெற்றிருக்க வேண்டும். லேபர் கட்சி 10 ஆசனங்களை வென்றிருந்தது.
இந்நிலையிலேயே லிபரல் கட்சி ஆட்சியமைப்பதற்குரிய சந்தர்ப்பத்தை கோரியுள்ளது.
எதிர்வரும் 19 ஆம் திகதி நாடாளுமன்றம் கூடவுள்ளது. இதன்போது பிரீமியர் நாடாளுமன்றத்தின் நம்பிக்கையை பெற வேண்டும். இம்முறையும் தொங்கு நாடாளுமன்றமே அமையும் சாத்தியம் உள்ளது.
புதிய அமைச்சரவை விரைவில் பதவியேற்கவுள்ளது.