இரண்டாம் உலகப்போரின்போது ஜப்பான்மீது அணுகுண்டு வீசப்பட்டு இன்றோடு 80 ஆண்டுகள் நிறைவுபெறுகின்றது. இதனை முன்னிட்டு ஜப்பானில் நினைவஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றன.
ஜப்பான் பிரதமர் தலைமையில் நடைபெற்ற நிகழ்வுகளில் உலக நாடுகளின் பிரதிநிதிகளும் பங்கேற்றிருந்தனர்.
1945 ஆம் ஆண்டு ஜப்பானின் ஹிரோஷிமா மற்றும் நாகசாகி ஆகிய இரு நகரங்கள்மீது அமெரிக்கா அணுகுண்டு தாக்குதல் நடத்தியது.
இதில் ஹிரோஷிமாவில் ஒரு லட்சத்து 40 அயிரம் பேரும், நாகசாகியில் 74 ஆயிரம் பேரும் பலியாகினார்கள். அத்துடன், இத்தாக்குதலில் உயிர் பிழைத்த பெரும்பாலான மக்கள் அணு கதிர்வீச்சின் தாக்கத்தால் பின்நாட்களில் உயிரிழந்தனர்.
உயிரிழந்த தமது உறவுகளை ஜப்பான் மக்கள் இன்று உணர்வுப்பூர்வமாக நினைவு கூர்ந்தனர்.
இந்த கொடூர சம்பவம் தொடர்பில் ஆஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் இன்று அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார்.
' அணு ஆயுதங்கள் இல்லாத உலகத்திற்கான உறுதிப்பாட்டை ஆஸ்திரேலியா மீண்டும் உறுதிப்படுத்துகிறது." - என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், அணு ஆயுதங்கள் மீண்டும் ஒருபோதும் பயன்படுத்தப்படவோ அல்லது சோதிக்கப்படவோ கூடாது என்பதை உறுதிசெய்ய அனைத்து நாடுகளும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் எனவும் அவர் அழைப்பு விடுத்தார்.