அமெரிக்க குடியேற்ற தடுப்புக் காவலில் இருந்த ஈரானிய நபரொருவரை ஆஸ்திரேலியாவுக்கு நாடு கடத்துவதற்கு ட்ரம்ப் நிர்வாகம் முயற்சித்துவருகின்றது என தகவல் வெளியாகியுள்ளது.
எனினும், இது பற்றி தமக்கு எதுவும் தெரியாது என ஆஸ்திரேலிய லேபர் அரச தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
52 வயதான குறித்த நபர் கஞ்சா வைத்திருந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் கைது செய்யப்பட்டார். அமெரிக்க குடியேற்ற கிறீன் கார்டை வைத்திருந்தாலும் அவர் காவலில் வைக்கப்பட்டார்.
12 வயதில் மாணவர் விசாவில் அமெரிக்கா சென்ற அவர் அங்கு 4 சதாப்தங்கள் வாழ்ந்து வருகின்றார்.
அவருக்கு ஈரானில் அச்சுறுத்தல் இருப்பதால் அங்கு நாடு கடத்த முடியாது. எனவே, மூன்றாவது நாடொன்றுக்கு அவரை நாடு கடத்த வேண்டும்.
இதற்கமைய அவரை ஆஸ்திரேலியா அல்லது ருமேனியாவுக்கு அமெரிக்கா அனுப்பலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
இவருக்கு ஆஸ்திரேலியாவுடன் எவ்வித தொடர்பும் இல்லை. அவரது குடும்பத்தார் எவரும் ஆஸ்திரேலியாவில் வசிக்கவில்லை. இந்நிலையில் அவரை எப்படி ஆஸ்திரேலியாவுக்கு நாடு கடத்த முடியும் என்ற கேள்வி எழுந்துள்ளது.
இந்நிலையில் இவ்விவகாரம் தொடர்பில் தமது நாட்டை அணுகப்படவில்லை என்று ஆஸ்திரேலிய வெளிவிவகார மற்றும் உள்துறை அமைச்சர்கள் தெரிவித்துள்ளனர்.
அத்துடன், அமெரிக்க குடியேற்றக் கைதிகளை ஆஸ்திரேலியாவுக்கு மாற்றுவது தொடர்பில் எவ்வித ஒப்பந்தமும் இல்லை என லேபர் அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் உள்ள குடியேற்றக் கைதிகள் தென் அமெரிக்க நாடுகளுக்கே பொதுவாக நாடு கடத்தப்படுவார்கள். நிலைமை இவ்வாறு இருக்க தற்போது ஆஸ்திரேலியா பற்றிய தகவல்கள் வெளியாகி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.