இலங்கையின் புதிய கல்வி மறுசீரமைப்பு தொடர்பில், இலங்கைக்கு பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்ரேலிய ஆளுநர் நாயகத்திற்கு, பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய விளக்கமளித்தார்.
ஆஸ்திரேலிய ஆளுநர் நாயகம் சமந்தா ஜோய் மோஸ்டினுக்கும், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவுக்கும் இடையிலான சந்திப்பு அலரிமாளிகையில் நடைபெற்றது.
இச்சந்திப்பானது இலங்கைக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் இடையிலான நீண்டகால நட்புறவை மீண்டும் உறுதிப்படுத்துவதற்கான ஒரு முக்கியமான சந்தர்ப்பமாக அமைந்தது.
பிரதமரால் வரவேற்கப்பட்ட ஆளுநர் நாயகத்துடன் நடைபெற்ற கலந்துரையாடலின்போது, குறிப்பாக அரசியல்,பொருளாதாரம், விளையாட்டு ஆகிய துறைகளில் இரு நாடுகளுக்கும் இடையிலான வலுவான ஒத்துழைப்பை கட்டியெழுப்புவதன் முக்கியத்துவம் வலியுறுத்தப்பட்டது.
அத்தோடு அனைவராலும் பெற்றுக்கொள்ளக்கூடிய, உயர்தரக் கல்வி முறைமையைக் கொண்டிருப்பதற்காக அமுல்படுத்தப்படவிருக்கும், இலங்கையின் புதிய கல்வி மறுசீரமைப்பு தொடர்பில் ஆளுநர் நாயகத்திற்கு பிரதமர் விளக்கமளித்தார்.
ஆஸ்திரேலியாவின் கல்வி முறைமை குறித்து ஆளுநர் நாயகம் பிரதமருக்குத் தெளிவுபடுத்தியதுடன், இத்துறையில் மிக நெருக்கமாக இணைந்து செயற்படுவதற்கான தமது ஆர்வத்தினையும் வெளிப்படுத்தினார்.
இலங்கையின் அபிவிருத்தி வேலைத்திட்டங்களுக்கு ஆஸ்திரேலியா தொடர்ந்தும் ஒத்துழைப்பு வழங்கும் என உறுதியளித்த ஆளுநர் நாயகம், பல துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பை விரிவுபடுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்தும் கலந்துரையாடினார்.