பாலஸ்தீனத்தை அங்கீகரிக்கும் ஆஸ்திரேலியாவின் முடிவானது பயங்கரவாதத்துக்கான வெகுமதியென இஸ்ரேல் ஜனாதிபதி விமர்சித்துள்ள நிலையில், தமது முடிவு சரியானது என்பதை பிரதமர் அந்தோனி அல்பானீஸி இன்று நியாயப்படுத்தியுள்ளார்.
அத்துடன், ஹமாசுக்கான தடை தொடரும் எனவும், பாலஸ்தீன நிர்வாகத்தில் ஹமாஸ் பங்கேற்பதும், அவர்களின் பிரதிநிதிகள் தேர்தலில் போட்டியிடுவது தடுக்கப்பட வேண்டும் எனவும் பிரதமர் வலியுறுத்தியுள்ளார்.
இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்தில் அப்பாவி மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். எனவே, இம்மோதலுக்கு முடிவு வேண்டும் என ஒட்டு மொத்த உலகமும் கருதுகின்றது எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
அதேவேளை, ஆஸ்திரேலியாவின் இந்த முடிவு தொடர்பில் யூத சமூகம் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளது. எனினும், பாலஸ்தீன தூதுவர் வரவேற்றுள்ளார்.
கனடா, பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளுடன் இணைந்து எதிர்வரும் செப்டம்பர் மாதம் நடைபெறவுள்ள ஐ.நா. பொதுச்சபைக் கூட்டத்தொடரில் , பாலஸ்தீனத்தை ஆஸ்திரேலியா அங்கீகரிக்கும் என பிரதமர் நேற்று அறிவித்தார். இந்த முடிவுக்கு இஸ்ரேல் பிரதமர் கடும் எதிர்ப்பு வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.