ஆஸ்திரேலியாவுக்கும், பசுபிக் தீவு நாடான வனுவாட்டுவுக்கும் இடையில் 500 மில்லியன் டொலர் மதிப்பிலான புதிய ஒப்பந்தமொன்று கைச்சாத்திடுவதற்கு இணக்கம் எட்டப்பட்டுள்ளது. குறித்த ஒப்பந்தம் அடுத்த மாதம் இறுதிப்படுத்தப்படவுள்ளது.
இதற்கு முன்னதாக இரு நாட்டு மூத்த அமைச்சர்கள் டான்னா தீவில் சந்தித்து பேச்சு நடத்தியுள்ளனர்.
ஆஸ்திரேலியாவின் சார்பில் துணை பிரதமர் ரிச்சர்ட் மால்ரஸ், வெளிவிவகார அமைச்சர் பெனி வோங் உள்ளிட்டவர்கள் சந்திப்பில் பங்கேற்றனர். இதன்போது இணக்கப்பாட்டு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.
புதிய உத்தேச ஒப்பந்தத்தின் பிரகாரம் அடுத்த 10 ஆண்டுகளில் வனுவாட்டுவுக்கு ஆஸ்திரேலியா 500 மில்லியன் டொலர்களை வழங்கவுள்ளது.
2022 இல் கைச்சாத்திப்பட்ட பாதுகாப்பு ஒப்பந்தத்தை வனுவாட்டு நிராகரித்திருந்தது. அவ்வொப்பந்தத்தை புதிய ஒப்பந்தம் சீர்செய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
புதிய ஒப்பந்தத்தின் உள்ளடக்கங்கள் இன்னும் பகிரங்கப்படுத்தப்படவில்லை என்றபோதிலும், இது சிறந்த மாற்றம் என ஆஸ்திரேலியா குறிப்பிட்டுள்ளது.
வனுவாட்டுவின் முக்கிய வணிக மற்றும் பாதுகாப்பு பங்காளியாக தன்னை இணைத்துக் கொள்ளும் சீனாவின் முயற்சிகளுக்கு ஆஸ்திரேலியா எதிர்ப்புத் தெரிவித்து வரும் நிலையில், புதிய ஒப்பந்தம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
காலநிலை மாற்றம், பாதுகாப்பு ஒத்துழைப்பு, காவல்துறை பயிற்சி உள்ளிட்ட விடயங்களை மையப்படுத்தியதாக புதிய ஒப்பந்தம் அமையுமென நம்பப்படுகின்றது.