——————————————————
- ஐங்கரன் விக்கினேஸ்வரா
(எண்பது வருடங்களுக்கு முன்பாக , 1945 ஆகஸ்ட் 6ம் திகதி உலக வரலாற்றில் யாரும் மறக்க முடியாத உலகின் முதல் அணுகுண்டு தாக்குதல் நடத்தப்பட்ட நாளாகும். இத்தாக்குதலின் பின்னரும், ‘மீண்டெழுதல்' என்று சொல்லுக்குப் பெயர் போன ஜப்பானில், இன்று அதே ஹிரோஷிமா மற்றும் நாகசாகி இரண்டும் உயர் வளர்ச்சி அடைந்த நகரங்களாக இருக்கின்றன)
மனித குல வரலாற்றில் நிகழ்ந்த மிக கொடூரமான இந்த சம்பவம், உலகளாவிய ஆயுதக் குறைப்பு மற்றும் அமைதி ஆகிய முயற்சிகளுக்கு வழிவகுத்தது. இதுவே, அணுசக்தி இல்லாத உலகம் என்ற எண்ணத்தை நோக்கி நகரவைத்தது. ஆனாலும் இந்த எண்ணங்கள் சாத்தியமானதா என்பதில் சந்தேகமே மிஞ்சுகிறது.
இரண்டாம் உலகப் போரின் பின்னர் காலப்போக்கில் அணு ஆயுதங்களைப் பயன்படுத்துவது பற்றிய கவலை ஒரு பெரிய உலகளாவிய பிரச்சினையாக உருவெடுத்தது. தற்போது ஒவ்வொரு ஆண்டும் ஹிரோஷிமா மற்றும் நாகசாகி அணுகுண்டு தாக்குதலுக்கான தினத்தில் அதில் பாதிக்கப்பட்டவர்களின் நினைவாக கௌரவிப்பதுடன், அமைதியை முன்னெடுப்பதற்காக பல்வேறு நிகழ்வுகளை ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்றன. இந்த வருடமும் பல நாடுகளில் அமைதி வேண்டி பல நகரங்கள் கவனயீர்ப்பு நிகழ்வுகள் நடைபெற்றன.
ஹிரோஷிமா - நாகசாகி கற்றுத் தரும் பாடம்:
உலக வரலாற்றில் அதிக சேதத்தையும், அதிக படிப்பினையையும் இரண்டாம் உலகப் போரே கற்றுக்கொடுத்தது. சூரியன் உதிக்கும் நாடு எனப் பெயர் பெற்ற ஜப்பான், இத்தாலி ஜெர்மனியுடன் கைகோர்த்து உலக நாடுகளை அச்சுறுத்தி வலம் வந்தன.
1941 டிசம்பர் 11 வரை அமெரிக்கா மறைமுகமாக பிரிட்டனுக்கு உதவினாலும் நேரடியாகக் களத்தில் இறங்கவில்லை. அமெரிக்காவுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுக்க நினைத்த ஜப்பான் அமெரிக்க போர்க் கப்பல்கள் அணிவகுத்து நிறுத்தப்பட்டிருக்கும் (Pearl harbour ) துறைமுகத்தை சிதைத்து விட்டால் அமெரிக்காவை ஒடுக்கிவிடலாமென நினைத்து ஜப்பானிய போர் விமானங்கள் குண்டுமழை பொழிய 2,000-க்கும் மேற்பட்ட வீரர்கள் உயிரிழந்தனர். இதன்பின்தான் நேரடியாகப் போரில் குதித்தது அமெரிக்கா.
இந்த தாக்குதலின் பின்னரே 1942-ம் ஆண்டு அணுகுண்டு தயாரிக்கும் மான்ஹாட்டன் திட்டத்தை ரகசியமாகச் செயல்படுத்தியது. 1940-ம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்ட புளூட்டானியம் அமெரிக்க அணுகுண்டு தயாரிப்புக்கு உதவியது. யுரேனியத்தை நியூட்ரான்களின் தாக்குதலுக்கு உட்படுத்துவதன் மூலம் புளூட்டோனியம் பெறப்பட்டது.
மூன்று ஆண்டுகளில் 1945-ம் ஆண்டு அணுகுண்டை முதலில் சோதித்துப் பார்த்தது அமெரிக்கா. எப்படியாவது ஜெர்மனிக்கு முன் கண்டுபிடித்தவிட வேண்டும் எனும் யூகம் வெற்றியைத் தந்தது. ஒரு சாதாரண குண்டை விட பத்து இலட்சம் மடங்கு சக்தி வாய்ந்ததாக அது இருந்தது.
1945இல் சோவியத் படைகளிடம் ஹிட்லர் தோல்வியுற்ற பின் ஜெர்மனியும் சரணடைந்தது. ஜப்பானுக்கு 1945 ஆகஸ்ட் 3-ம் தேதி காலக் கெடுவாக அமெரிக்கா விதித்தது. அதைப் புறக்கணித்ததால் அணுகுண்டைப் பயன்படுத்தி ஜப்பானை பணியவைக்க அதிபர் ட்ரூமன் முடுவெடுத்தார்.
அணுகுண்டை எங்கு வீசுவது?
ஜப்பான் மீது அணுகுண்டை பிரயோகிக்க முடிவெடுத்த பின் எங்கு வீசுவது என்ற கேள்வி எழுந்தது.
மக்கள் நடமாட்டம் இல்லாத பகுதி, நகர மையப்பகுதி, அரண்மனைகள், ஆலயங்கள் என விவாதித்து இறுதியில் நாகசாகி, கொகுரா, ஹிரோஷிமா, கியோட்டோ, நீகேடா எனும் ஐந்து நகரங்கள் தேர்வாகின.
சான்பிரான்ஸிஸ்கோவிலிருந்து இன்டியானா பொலிஸ் கப்பல் மூலம் யுரேனிய குண்டிற்கான மூலப்பொருள்கள் வந்தடைந்தது. ஹிரோஷிமா ஹேன் சூ தீவில் அமைந்துள்ள நகரம் ஹிரோஷிமா. 73 சதுர கிலோமீட்டர் நிலப்பரப்பில் 2 லட்சத்துக்கும் மேல் மக்களைக் கொண்ட நகரம்.
1945-ம் ஆண்டு ஆகஸ்ட் 6-ம் நாள் காலை எப்போதும் போல் விடிந்தது அம்மக்களுக்கு. காலை 8.15 மணிக்கு என்ன நடக்கப் போகிறதென தெரியாமல் மக்கள் எப்போதும் போல் இயங்கிக் கொண்டிருந்தனர். வானில் மூன்று விமானங்கள் பறந்தன.
ஹிரோஷிமாவில் வானிலை தெளிவாக இருப்பதாகத் தகவல் கிடைத்தவுடன் கர்னல் டிப்பெட்ஸ{ம், உடன் ராபர்ட் லூயிஸ{ம் உலகின் முதல் அணுகுண்டை பிரயோகிக்கப் போகிறோம் என்ற இறுமாப்புடன் பறந்தனர்.
நிலத்தில் வெடிக்காமல் 1,850 அடி உயரத்திலேயே வெடித்தன. விமானிகள் பாதுகாப்புக் கண்ணாடிகளை அணிந்து பார்வையிட்டனர். எனினும், பேரொளிக்குப் பின் எங்கும் புகை மண்டலமாகவே இருந்தது.1 கி.மீ பரப்பிலிருந்த ஆயிரக்கணக்கான கட்டடங்கள் விழுந்தன. ஹிரோஷிமாவில் இருந்த 60,000 கட்டடங்கள் சேதமடைந்தன.
இந்த தாக்குதலில் 1,40,000 பேர் உடனடியாய் இறந்தனர். குண்டு வெடித்த மையத்தில் பாரியவெப்பக் கதிர் நிலவியதால் உடல்கருகி இறந்தனர். ஒன்றரை கிலோமீட்டர் தூரத்துக்கு வெப்பம் இருந்தது. 16 மணி நேரம் கழித்து அமெரிக்கா அணுகுண்டு வீசியதை அறிவித்தது.
அதுவரை என்ன வகை குண்டென்றே யாருக்கும் தெரியவில்லை. குண்டு வெடித்த துயரம் அடங்கியவுடன் கதிர்வீச்சு ஆரம்பித்து. இதில் பல ஆயிரம் பேர் மாண்டனர். நகரை விட்டு தள்ளி இருந்தவர்களும் தப்பவில்லை.
அடுத்த இலக்கு நாகசாகி:
ஹிரோஷிமா பேரழிவுக்குப் பின் ஆகஸ்ட் 9-ம் நாள் டோக்கியோவில் ஜப்பான் தலைமை குழு கூடி நேச நாடுகளிடம் சரணடைய விவாதித்தனர். சரணடைய காலதாமதம் ஆனதால் அமெரிக்க நாகசாகியில் ஆகஸ்ட் 9-ம் தேதி காலை 11 மணிக்கு பட் மான்( FAT MAN ) எனும் புளூட்டானியம் குண்டை வீசியது.
அதே அளவு உயிர்சேதம் இங்கும் நிகழ்ந்தது. ஜப்பான் நிலைகுலைந்து போனது. இதற்குப் பின்னும் சரணடையாவிட்டால் செப்டம்பரிலும் அக்டோபரிலும் மீண்டும் குண்டு வீச இரு திட்டங்கள் வைத்திருந்தது அமெரிக்கா.
ஆனால், ஜப்பான் 1945 ஆகஸ்ட் 15-ம் நாள் மன்னர் ஹிரோஹிடோ ரேடியோ மூலம் தன்னம்பிக்கை உரையாற்றினார். செப்டம்பர் 2-ம் தேதி போர்நிறுத்தத்தில் கையெழுத்திட்டது. உயிர்தப்பியவர்கள் மரணத்திலிருந்து தப்பித்தாலும் கதிரியக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புதான் அதிகம். பல குழந்தைகள் பிறப்பிலேயே ஊனமாகப் பிறந்தனர். தழும்புகளுடன் இன்னும் வாழ்கின்றனர். இருநகரமும் அணு ஆயுதத்தால் உருவாகும் பேரழிவை உலகுக்கு உணர்த்தும் வரலாறாக உள்ளது.
அமெரிக்கா எச்சரிக்கை இன்றி வீசிய அணுகுண்டு:
1945-ல் ஆகஸ்ட் 6-ம் தேதி ஜப்பான் மக்கள் எதிர்பாராத சமயத்தில், எந்தவொரு எச்சரிக்கை அறிவிப்பும் விடுக்காமல், ஹிரோஷிமாவில் ‘லிட்டில் பாய்’ என்ற பெயரில் முதல் அணுகுண்டை போட்டது என்றும் குற்றச்சாட்டும் உள்ளது.
1939இல் தொடங்கிய இரண்டாம் உலகப் போர், 1945இல் முடிவை நோக்கி நகர்ந்துகொண்டிருந்த நேரம் அது. ஆனால் இடைப்பட்ட இந்த ஆறாண்டு காலமும், நாசி நாடுகள் அணியில் இடம்பெற்றிருந்த ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான் ஆகிய நாடுகளும், நேச நாடுகள் அணியில் இடம்பெற்றிருந்த பிரிட்டன், பிரான்ஸ், ரஷ்யா ஆகிய நாடுகளுக்கும் கடுமையான போர் நடைபெற்றது.
இதில், சோவியத் யூனியனும் ஜெர்மனிக்கு எதிராக நேச நாடுகளுடன் இணைந்து போரிட்டது. இந்தக் கடும் போரில் இலட்சக்கணக்கான உயிர்கள் மடிந்தன.
ஆனால் 1945 மே மாதம், ஹிட்லரின் ஜெர்மனி நாஜி படை ரஷயாவிடம் சரணடைந்ததையடுத்து பெரும்பாலான பகுதிகளில் போர் முடிந்திருந்தது.
ஆனால், ஆசியாவில் போர் நீண்டுகொண்டிருந்தது. அதனால், ஜப்பான் மீது அணுகுண்டு வீசி போரை முடிவுக்கு கொண்டுவர முடிவெடுத்தது அமெரிக்கா.
இந்தத் தாக்குதலுக்குப் பின்னர் ஜப்பான் வேறுவழியில்லாமல், நேச நாடுகள் அணியிடம் சரணடையவே, இரண்டாம் உலகப் போர் முடிவுக்கு வந்தது. ஆனால், அமெரிக்காவின் அணுகுண்டு தாக்குதலால் ஏற்பட்ட உயிரிழப்பு, கதிர்வீச்சு பாதிப்பு ஆகியவற்றால் அந்த ஆண்டின் இறுதியில் பலி எண்ணிக்கை மட்டும் 1,40,000-ஆக அதிகரித்தது.
குறிப்பாக, அந்த அணுகுண்டு தாக்குதலின் கதிர்வீச்சு பாதிப்புக்குள்ளானவர்களின் சந்ததியினர் தலைமுறை தலைமுறையாக உயிரியல் குறைபாட்டுடன் பிறந்தனர்.
இயற்கை பேரிடராக இருந்தாலும், மனிதனின் செயற்கை பேரிடராக இருந்தாலும் 'மீண்டெழுதல்' என்று சொல்லுக்குப் பெயர்போன ஜப்பானில், இன்று அதே ஹிரோஷிமா மற்றும் நாகசாகி இரண்டும் வளர்ந்த நகரங்களில் ஒன்றாக உருவெடுத்திருக்கிறது. மேலும்,அணுகுண்டு தாக்குதலில் இறந்த ஆத்மாக்களுக்காக அர்ப்பணிக்கப்பட்ட நினைவுச் சின்னங்கள் மற்றும் அருங்காட்சியகங்கள் அங்கு அமைக்கப்பட்டிருக்கிறது.