ஆஸ்திரேலியாவில் இஸ்லாமிய வெறுப்பு சம்பவங்கள் அதிகரித்துவருகின்றன என்று விக்டோரியா இஸ்லாமிய கவுன்சில் தெரிவித்துள்ளது.
எனினும், இது பற்றி பாதிக்கப்பட்டவர்கள் முறையிடுவதில்லை எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
விக்டோரியா இஸ்லாமிய கவுன்சிலின் ஏற்பாட்டில் முஸ்லிம் வெறுப்பு சம்பவங்கள் தொடர்பான மாநாடு நேற்று மெல்பேர்ணில் நடைபெற்றது.
அரசியல்வாதிகள், மதத்தலைவர்கள், கல்வியலாளர்கள், பொலிஸார் உட்பட பலரும் இதில் கலந்துகொண்டிருந்தனர்.
2021 ஆம் ஆண்டு முதல் 96 சம்பவங்கள் பதிவாகியுள்ளன எனவும், இவற்றில் 26 வெறுப்பு சம்பவங்கள் கடந்த 7 மாதங்களுக்குள் இடம்பெற்றுள்ளன எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
கேலி செய்தல், வாய்மொழிமூல துஷ்பிரயோகம் உள்ளிட்ட சம்பவங்கள் பெரும்பாலாக இடம்பெற்றுள்ளன. இவை தொடர்பில் முறைப்பாடு செய்யப்படவில்லை.
இஸ்ரேல், ஹமாஸ் போரை அடுத்து ஆஸ்திரேலியாவில் முஸ்லிம் மற்றும் யூத விரோத சம்பவங்கள் இடம்பெற்றுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.