ஐ.நா. பாதுகாப்பு சபையில் இந்தியா நிரந்தர உறுப்பினராக குவாட் தலைவர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான் மற்றும் இந்தியா ஆகிய 4 நாடுகள்அடங்கிய ‘குவாட்’ கூட்டமைப்பின் உச்சி மாநாடு இம்முறை இந்தியாவில் நடக்க இருந்தது.
எனினும, அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதால் உச்சி மாநாட்டை நடத்த அமெரிக்க அரசு விருப்பம் தெரிவித்தது.
அதன்படி, அமெரிக்காவின் டெலவர் மாநிலத்தில் உள்ள பைடனின் சொந்த ஊரான வில்மிங்டன் நகரில் குவாட் உச்சி மாநாடு நடைபெற்றது.
இதில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், இந்திய பிரதமர் மோடி, ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸி, ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடோ ஆகியோர் பங்கேற்றனர்.
இந்தியபெருங்கடல், பசிபிக் பெருங்கடலில் சுதந்திரமான கடல் போக்குவரத்து உறுதி செய்யப்பட வேண்டும் என்பது உட்பட முக்கிய பல விடயங்கள் தொடர்பில் மாநாட்டில் பேசப்பட்டுள்ளன. உலக நிலைவரம் தொடர்பிலும் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.
அத்துடன், அடுத்த ஆண்டு குவாட் உச்சி மாநாடு இந்தியாவில் நடத்தப்படவுள்ளது.
‘‘பசிபிக் பிராந்தியத்தில் சீனா அத்துமீறி செயல்படுகிறது. எங்களது பொறுமையை சீனா சோதிக்கிறது’’ என்று மாநாட்டில் அமெரிக்க ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.
“வளமான இந்திய, பசிபிக் பிராந்தியத்தை உருவாக்க குவாட் கூட்டமைப்பின் 4 நாடுகளும் ஒன்றிணைந்து செயல்படும்’’ என்று ஆஸ்திரேலிய பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், குவாட் அமைப்பு எதிர்காலத்திலும் வலுவாக செயல்பட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.