போர் மண்டலமான காசாவில் இடம்பெறும் மனிதாபிமான பேரழிவு தொடர்பான செய்திகளை சேகரிப்பதற்கு சர்வதேச ஊடகவியலாளர்களை காசாவுக்குள் அனுமதிக்குமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, ஜேர்மன் உட்பட 27 நாடுகள் இணைந்தே, இஸ்ரேலை இவ்வாறு வலியுறுத்தியுள்ளன.
அத்துடன், காசாவில் செயற்படும் ஊடகவியலாளர்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும் எனவும் கூட்டறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
போர் ஆரம்பித்தது முதல் காசா, லெபனான், மேற்குக்கரை மற்றும் இஸ்ரேலில் 192 ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர் எனவும், காசாவில் ஊடகவியலாளர்கள் குறிவைக்கப்பட்டுள்ளனர் எனவும் கூறப்படுகின்றது.
இம்மாத தொடக்கத்தில் காசாவில் 7 ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்ட விவகாரம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இவ்வாறானதொரு பின்புலத்திலேயே 27 நாடுகள் இணைந்து மேற்படி கூட்டறிக்கையை வெளியிட்டுள்ளன.