குழந்தை பராமரிப்பு பணியாளர்களுக்கு தேசிய பதிவேட்டை நிறுவவும், குழந்தை பராமரிப்பு மையங்களில் உள்ள சிசிரிவி கமராக்களை சோதனையிடவும், குழந்தை பாதுகாப்பு பயிற்சி வழங்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மத்திய, மாநில மற்றும் பிரதேச கல்வி அமைச்சர்கள் சிட்னியில் இன்று ஒன்றுகூடி கலந்துரையாடலில் ஈடுபட்டனர். இதன்போதே இம்முடிவு எட்டப்பட்டுள்ளது.
மெல்பேர்ணிலுள்ள குழந்தை பராமரிப்பு நிலையத்தில் பணியாற்றிய நபரொருவர், பாலியல் குற்றச்செயல்களில் ஈடுபட்ட பின்னர், குழந்தை பராமரிப்பு மற்றும் மறுசீரமைப்பு தொடர்பில் கருத்தாடல் உருவானது.
இவ்வாறானதொரு பின்புலத்திலேயே மேற்படி கூட்டம் நடைபெற்றது.
சிசிரிவி கமரா சோதனை நடவடிக்கை ஒக்டோபர் மாதம் முதல் ஆரம்பமாகும். இதற்குரிய நிதி பங்களிப்பை அரசாங்கம் வழங்கவுள்ளது.
குழந்தை பராமரிப்பு நிலையங்களில் செப்டம்பர் மாதம் முதல் கையடக்க தொலைபேசி பாவனைக்கு தடை விதிக்கப்படவுள்ளது.
பணியாளர்களுக்கு கட்டாய குழந்தை பாதுகாப்பு பயிற்சியும் வழங்குவதற்கு முடிவெடுக்கப்பட்டுள்ளது. பயிற்சி திட்டம் அடுத்த வருடம் ஆரம்பத்தில் முன்னெடுக்கப்படும்.