காசா வைத்தியசிhலைமீது இஸ்ரேல் நேற்று நடத்திய தாக்குதலில் ஐந்து ஊடகவியலாளர்கள் உட்பட 20 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல் ஹமாஸ் அமைப்பினர், இஸ்ரேல் ராணுவத்துக்கும் இடையில் மோதல் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், கான் யூனிஸ் நகரில் உள்ள நாசர் வைத்தியசாலைமீது இஸ்ரேல் ராணுவம் நேற்று வான் வழி தாக்குதல் நடத்தியது.
இதில் 5 ஊடகவியலாளர்கள் உட்பட 20 பேர் உயிரிழந்ததாக காசா பொதுமக்கள் பாதுகாப்பு முகமையின் செய்தித் தொடர்பாளர் மமுத் பசல் தெரிவித்துள்ளார்.
வைத்தியசாலை மீது தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல் ராணுவமும் ஒப்புக்கொண்டுள்ளது.
இதுகுறித்து அல் ஜசீரா வெளியிட்ட அறிக்கையில், “இஸ்ரேல் தாக்குதலில் எங்கள் புகைப்பட கலைஞர் முகமது சலமா உயிரிழந்தார். இந்த தாக்குதலை வன்மையாக கண்டிக்கிறோம்’’ என கூறப்பட்டுள்ளது.
இதுபோல, அசோசியேட்டடு பிரஸ் பகுதிநேர செய்தியாளர் மரியம் டக்கா என்பவரும் உயிரிழந்துள்ளார். இஸ்ரேல், காசா இடையிலான போரில் கடந்த 2 ஆண்டுகளில் 200 பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இத்தாக்குதல் சம்பவத்தை ஐ.நா. வன்மையாகக் கண்டித்துள்ளது.
அத்துடன், ஆஸ்திரேலியாவும் கடும் கண்டனம் வெளியிட்டுள்ளது. இது கொடூரமான தாக்குதல் என வெளிவிவகார அமைச்சர் பெனி வோங் சுட்டிக்காட்டினார். போரை முடிவுக்கு கொண்டுவருமாறு இஸ்ரேல் பிரதமருக்கு அவர் அழைப்பு விடுத்தார்.