வடக்கு விக்டோரியாவில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் இரு பொலிஸ் அதிகாரிகள் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் ஒரு பொலிஸ் அதிகாரி காயம் அடைந்துள்ளார்.
மெல்போர்னில் இருந்து சுமார் 300 கிலோ மீற்றர் தொலைவில் உள்ள விக்டோரியாவின் ஆல்பைன் பகுதியிலுள்ள வீடொன்றில் இருந்து பொலிஸாருக்கு இன்று அவசர உதவி அழைப்பு வந்துள்ளது.
இதற்கமைய பொலிஸார் குறித்த வீட்டுக்கு சென்றவேளையிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
பதுங்கி இருந்த நபரொருவரே பொலிஸார்மீது இவ்வாறு தாக்குதல் நடத்திவிட்டு தப்பிச்சென்றுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவத்தை அடுத்து குறித்த பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. ஆயிரம் வரையிலான பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் நடந்த இடத்துக்கு வரவேண்டாம் என மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலதிக தகவல்கள் அதிகாரப்பூர்வமாக இன்னும் அறிவிக்கப்படவில்லை. விக்டோரியா பொலிஸாருக்கு உதவுவதற்கு பெடரல் பொலிஸாரும் முன்வந்துள்ளனர்.