ஆஸ்திரேலியாவின் நடவடிக்கைக்கு இராஜதந்திர மட்டத்தில் பதிலடி கொடுக்கப்படும் என்று ஈரான் தெரிவித்துள்ளது.
ஆஸ்திரேலியாவில் இடம்பெற்ற யூத எதிர்ப்பு தாக்குதல் சம்பவங்களின் பின்னணியில் ஈரான் இருந்துள்ளது என உளவு பிரிவு கண்டறிந்துள்ளது.
இதனையடுத்து ஆஸ்திரேலியாவில் உள்ள ஈரான் தூதுவரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அவருக்கு 7 நாட்கள் கெடு வழங்கப்பட்டுள்ளது. அத்துடன், ஈரான் புரட்சிகர இராணுவத்தை பயங்கரவாத அமைப்பாக ஆஸ்திரேலியா பட்டியலிட்டுள்ளது. இதற்குரிய சட்டம் இயற்றப்படவுள்ளது.
இரண்டாம் உலகப் போருக்கு பின்னர் தூதுவரொருவரை ஆஸ்திரேலியா வெளியேற்றுவது இதுவே முதல் சந்தர்ப்பமாகும்.
அத்துடன், ஈரானில் உள்ள தமது நாட்டு தூதுவரையும் ஆஸ்திரேலியா திரும்ப அழைத்துள்ளது.
இந்நிலையில் இது விடயம் தொடர்பில் பரஸ்பர நடவடிக்கை எடுக்கப்படும் என ஈரான் அறிவித்துள்ளது.
'கூறப்படும் குற்றச்சாட்டுகளை நிராகரிக்கின்றோம்." என்று ஈரான் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் எஸ்மாயில் பக்காய் தெரிவித்தார்.
' இராஜதந்திர மட்டத்தில் எந்தவொரு பொருத்தமற்ற மற்றும் நியாயமற்ற நடவடிக்கையும் பரஸ்பர எதிர்வினையைக் கொண்டிருக்கும்" எனவும் அவர் கூறினார்.
இஸ்ரேல்மீது ஆஸ்திரேலியா முன்வைத்த விமர்சனங்களை ஈடுசெய்யும் வகையில் ஈரான்மீது கைவைக்கப்பட்டிருக்கலாம் எனவும் வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.