இரு பொலிஸ் அதிகாரிகளை சுட்டுக்கொலை செய்த நபரை கைது செய்வதற்குரிய தேடுதல் வேட்டை தொடர்ந்து இடம்பெற்றுவருகின்றது.
56 வயதான குறித்த நபரை மடக்கிபிடிப்பதற்காக விக்டோரியா பொலிஸாருக்கு பெடரல் பொலிஸாரும் ஒத்துழைப்பு வழங்கிவருகின்றனர்.
துப்பாக்கிதாரியின் பின்புலம் பற்றி புலனாய்வு அமைப்புகளும் கழுகுப்பார்வை செலுத்தியுள்ளன.
விக்டோரியாவில் போரேபுன்கா நகரிலுள்ள வீடொன்றுக்கு வழக்கு தொடர்பில் பிறப்பிக்கப்பட்ட வாரண்டை நிறைவேற்றுவதற்கு பொலிஸார் நேற்று சென்றிருந்தனர்.
இதன்போது மர்ம நபர் ஒருவர் துப்பாக்கியால் பொலிஸார்மீது சரமாரியாக சுட்டுள்ளார். இதில் வாரண்ட் நகலை ஒட்டச் சென்ற பொலிஸார் மீது குண்டு பாய்ந்தது.
சம்பவ இடத்திலேயே 2 பேர் கொல்லப்பட்டனர். ஒருவர் படுகாயம் அடைந்தார். அவரை அங்குள்ளோர் மீட்டு வைத்தியசாலையில் சேர்த்தனர்.
துப்பாக்கியுடன் மர்ம நபர் காணப்பட்டால் பொது மக்கள் யாரும் வீடுகளை விட்டு பொது வெளியில் நடமாட வேண்டாம் என்று நேற்று அறிவுறுத்தப்பட்டிருந்தது. இன்றும் அந்த அறிவித்தல் தொடர்கின்றது.
அத்துடன், தலைமறைவான நபரை பிடிப்பதற்குரிய தேடுதல் வேட்டையும் தொடர்ந்து இடம்பெற்றுவருகின்றது.
அவுஸ்திரேலியாவில் துப்பாக்கி வன்முறை என்பது அரிதான ஒன்றாகும்.
1996-ல் தாஸ்மேனியாவில் நடந்த ஒரு பெரும் துப்பாக்கிச் சூட்டில் 35 பேர் கொல்லப்பட்டதை அடுத்து, அரசாங்கம் கட்டாயமாக துப்பாக்கிகளைத் திரும்பப் பெறும் திட்டத்தை அமுல்படுத்தியது.
இந்த தற்காலிக திரும்பப் பெறும் திட்டங்கள் பொதுமக்களின் கைகளில் இருந்த துப்பாக்கிகளின் எண்ணிக்கையைக் குறைத்தன.
பாரிய துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் அரிதாக இடம்பெற்றிருந்தாலும், கடந்த ஜூன் மாதம் தாஸ்மேனியாவில் ஒரு வீட்டைக் கைப்பற்றுவதற்கான பிடியாணையை வழங்கச் சென்றபோது, பொலிஸ் அதிகாரி ஏனைய அதிகாரிகளுடன் இருந்த நிலையில் சுட்டுக் கொல்லப்பட்டார்.
ஜூன் மாத சம்பவத்தைத் தவிர்த்து, 2020 ஆம் ஆண்டு முதல் 14 அதிகாரிகள் பணியின் போது கொல்லப்பட்டுள்ளதாக ஆஸ்திரேலிய தேசிய பொலிஸ் நினைவகம் தெரிவித்துள்ளது.
போரேபுன்காவில் இடம்பெற்ற சம்பவம் ஆஸ்திரேலியாவை உலுக்கியுள்ளது.