ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புக்கு ஆதரவளிக்குமாறு வலியுறுத்தி சமூக வலைத்தளங்களில் காணொளிகளை பதிவிட்ட பிரிஸ்பேன், லோகன் பகுதியை சேர்ந்த நபருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
46 வயதான குறித்த நபர் நேற்று பிரிஸ்பேன் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டபோது 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
மூன்றாண்டுகள் சிறை தண்டனை எதிர்கொண்ட பின்னரே அவர் பிணைக்கு விண்ணப்பிக்க முடியும்.
பயங்கரவாதத்தை ஆதரித்தமை உட்பட அவர்மீது ஆறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. இரண்டு குற்றச்சாட்டுகளில் இருந்து அவர் விடுவிக்கப்பட்டுள்ளார்.
பயங்கரவாத சித்தாந்தம் மற்றும் சிரியாவுக்கு செல்வதற்கான ஊக்குவிப்பு உள்ளிட்ட நடவடிக்கைக்காக இயங்கிய குழுவில் இவர் முக்கிய பங்கு வகித்துள்ளார்.
இவர் தொடர்பில் உளவு பிரிவுக்கு தகவல் கிடைக்கப்பெற்றதையடுத்து, அவர் கண்காணிக்கப்பட்டார். பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் வகையில் அவரது பதிவுகள் அமைந்துள்ளன.
சிரியாவுக்கு 2013 ஆம் ஆண்டு சட்டவிரோதமாக சென்ற ஆஸ்திரேலிய நபரொருவருக்கு இவர் நிதி உதவி வழங்கியுள்ளார் என்பதும் கண்டறியப்பட்டுள்ளது.
2019 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் இருந்து வெளியேறிய குறித்த நபர் 2021 மார்ச் மாதம் சவூதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டார். அங்கிருந்து 2021 ஜுலை மாதம் ஆஸ்திரேலியாவுக்கு நாடு கடத்தப்பட்டார்.
சிட்னி விமான நிலையம் வந்த அவர் பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டார்.
விசாரணைகளின் பின்னர் கடும் நிபந்தனைகளுடன் பிணை வழங்கப்பட்டது.
பிணை நிபந்தனைகளைமீறியதால் கைது செய்யப்பட்டு, காவலில் வைக்கப்பட்டார்.
வழக்கு விசாரணை தொடர்ந்து இடம்பெற்று வந்தநிலையிலேயே நேற்று சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.