மேற்கு சிட்னியில் இடம்பெற்ற கத்திக்குத்து தாக்குதல் சம்பவத்தில் இளைஞர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். இது குழு மோதலுடன் தொடர்புபட்ட சம்பவமா என்ற கோணத்தில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர்.
19 வயதான இரு இளைஞர்கள்மீதே நேற்றிரவு 10 மணியளவில் இவ்வாறு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில் இருவரும் படுகாயம் அடைந்தனர்.
மார்பு பகுதியில் வெட்டு காயங்களுக்கு இலக்கான நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மற்றவர் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்றுவருகின்றார்.
நான்கு பேரடங்கிய குழுவொன்றே கத்திகள் சகிதம் வந்து தாக்குதலை நடத்தியுள்ளது என தெரியவந்துள்ளது. இவர்கள் கறுப்பு உடை அணிந்தே வந்துள்ளனர்.
இவர்கள் குற்ற கும்பலைச் சேர்ந்தவர்கள் என சந்தேகிக்கப்படுகின்றது. மேற்கு சிட்னியில் செயற்படும் '67" என்ற கும்பலுடன் தொடர்புபட்டவர்களா என விசாரணை நடக்கின்றது.
நியூ சவூத் வேல்ஸ் மாநிலத்தில் பாதாள குழுக்களுக்கிடையிலான மோதல் சம்பவங்கள் அதிகரித்துள்ளன.