இரு பொலிஸ் அதிகாரிகளை சுட்டுக்கொலை செய்த நபரை கைது செய்வதற்குரிய தேடுதல் வேட்டை இன்று மூன்றாவது நாளாகவும் தொடர்கின்றது.
தேடுதல் விமானங்கள், ட்ரோன்கள் மற்றும் மோப்ப நாய்களும் இதற்காக களமிறக்கப்பட்டுள்ளன.
அத்துடன், உயிரிழந்த பொலிஸாருக்கு ஆஸ்திரேலிய மக்கள் அஞ்சலி செலுத்திவருகின்றனர்.
56 வயதான கொலையாளியை மடக்கிபிடிப்பதற்காக விக்டோரியா பொலிஸாருக்கு பெடரல் பொலிஸாரும், புலனாய்வு அமைப்பினரும் ஒத்துழைப்பு வழங்கிவருகின்றனர்.
விக்டோரியாவில் போரேபுன்கா நகரிலுள்ள வீடொன்றுக்கு வழக்கு தொடர்பில் பிறப்பிக்கப்பட்ட வாரண்டை நிறைவேற்றுவதற்கு பொலிஸார் நேற்று முன்தினம் சென்றிருந்தனர்.
இதன்போது மர்ம நபர் ஒருவர் துப்பாக்கியால் பொலிஸார்மீது சரமாரியாக சுட்டுள்ளார். இதில் வாரண்ட் நகலை ஒட்டச் சென்ற பொலிஸார் மீது குண்டு பாய்ந்தது.
சம்பவ இடத்திலேயே 2 பேர் கொல்லப்பட்டனர். ஒருவர் படுகாயம் அடைந்தார். அவரை அங்குள்ளோர் மீட்டு வைத்தியசாலையில் சேர்த்தனர்.
கொலையாளி துப்பாக்கி சகிதம் தலைமறைவாகி உள்ளதால் சமூக பாதுகாப்பு தொடர்பிலும் அச்சம் எழுந்துள்ளது.