பெண்ணொருவரைக் கடத்தி கொலை செய்தார் எனக் கூறப்படும் நபர் கைது செய்யப்பட்டு, அவர்மீது கொலைக்குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
மேற்கு சிட்னியில் கடந்த ஏப்ரல் 17 ஆம் திகதி 47 வயது பெண்ணொருவர், அவரது வீட்டில் இருந்து கடத்தப்பட்டார். முகமூடி அணிந்து வந்த நபரொருவரே இவ்வாறு கடத்திச் சென்றிருந்தார்.
மெல்பேர்னில் இயங்கும் வியட்நாமுடன் தொடர்புடைய பாதாள குழுவுடன் குறித்த பெண்ணின் கணவனுக்கு தொடர்பு இருப்பதால்தான் அவர் குறிவைக்கப்பட்டார் என தகவல் வெளியாகியுள்ளது.
கடத்தப்பட்ட பெண், சில மணிநேரங்களின் பின்னர் காரொன்றில் எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். அவர் சுட்டுக்கொலை செய்யப்பட்டு, எரிக்கப்பட்டுள்ளார் என்பது விசாரணையில் தெரியவந்தது.
29 வயது இளைஞர் ஒருவரே இக்கொலையை செய்துள்ளார் என பொலிஸார் கண்டறிந்தள்ளனர். இவர் குற்ற கும்பலுடன் தொடர்புபட்டவர் என்பதும் தெரியவந்துள்ளது.
இந்நிலையில் அவர் நேற்று கைது செய்யப்பட்டார். நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்ட பின்னர் அவர் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.