இரு பொலிஸ் அதிகாரிகளை சுட்டுக் கொலை செய்துவிட்டு தலைமறைவாகியுள்ள மெஸி பிரிமேனுக்கு சமூகத்தில் உள்ளவர்கள் உதவி செய்கின்றனர் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
குறித்த நபரை கைது செய்வதற்குரிய தேடுதல் வேட்டை ஆறு நாட்களை கடந்தும் தொடர்கின்றது.
விக்டோரியாவில் போரேபுன்கா நகரிலுள்ள வீடொன்றுக்கு வழக்கு தொடர்பில் பிறப்பிக்கப்பட்ட வாரண்டை நிறைவேற்றுவதற்கு பொலிஸார் சென்றிருந்த வேளை, இரு பொலிஸ் அதிகாரிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்ற இச்சம்பவத்தையடுத்து துப்பாக்கிதாரி தலைமறைவானார்.
துப்பாக்கிச்சூடு நடத்திய நபர் ‘இறையாண்மையுடைய குடிமக்கள்’ எனும் கொள்கையை கடைபிடிக்கும் குழுவை சேர்ந்தவர் என்பதால் காடுகளில் தலைமறைவாக பதுங்கி இருப்பது பற்றி நன்கு தெரிந்து வைத்துள்ளார்.
அவரின் மனைவி மற்றும் மகன் ஆகியோர் கைது செய்யப்பட்டிருந்தாலும், விசாரணைகளின் பின் விடுவிக்கப்பட்டனர்.
பிரிமேனுக்கு சரணடைவதற்கு வாய்ப்பு வழங்கப்பட்டிருந்தது. தற்போது அவர் இருக்கும் இடம் பற்றி பொதுமக்களிடம் உதவி கோரப்பட்டுள்ளது.
அவர் தலைமறைவாக இருப்பதற்கு சமூகத்தில் எவரேனும் உதவக்கூடும் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.