பூர்வக்குடி மக்களால் முன்னெடுக்கப்பட்ட போராட்ட முகாம்மீது வன்முறையைக் கட்டவிழ்த்துவிட்ட நவ - நாஜிகள் குழு தலைவர் தாமஸ் செவெல் உள்ளிட்ட குழுவினருக்கு எதிராக சட்ட நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது.
பொலிஸாரால் நவ நாஜிகளின் தலைவர் உட்பட இருவர் கைது செய்யப்பட்டனர்.
காவலில் வைக்கப்பட்டிருந்த அவர்கள் இன்று மெல்பேர்ண் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டனர்.
வன்முறை, குழப்பம் விளைவித்தல் உட்பட மேலும் சில குற்றச்சாட்டுகள் இவர்களுக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ளன.
நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்ட இருவருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது. எதிர்வரும் டிசம்பர் 10 ஆம் திகதி நீதிமன்றத்தில் முன்னிலையாக வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
குடியேற்ற எதிர்ப்பு பேரணி கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட பின்னரே பூர்வக்குடி மக்களின் முகாமுக்குள் புகுந்து தாக்குதல் நடத்தியுள்ளனர்.
அதேவேளை, விக்டோரிய மாநில பிரிமியரால் நடத்தப்பட்ட ஊடக சந்திப்புக்குள் புகுந்தும், நவ நாஜிகள் தலைவர் குழப்பம் விளைவித்திருந்தார். இவ்விவகாரம் தொடர்பிலும் அவருக்கு எதிராக சட்டம் செயற்படவுள்ளது.
இதற்கிடையில் நியூசிலாந்தை பூர்வீகமாகக் கொண்ட தாமஸ் செவெல்ஸை நாடு கடத்துமாறு ஆஸ்திரேலியாவில் கோரிக்கை எழுந்துள்ளது.
வெள்ளை மேலாதிக்க சிந்தனையில் வன்முறையை தூண்டுகின்றார் எனக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அவரை நாடு கடத்துவதற்குரிய மனுவில் கையொப்பம் திரட்டும் நடவடிக்கை ஆரம்பமாகியுள்ளது.