இரண்டாம் உலகப் போரின்போது ஜப்பானுக்கு எதிரான போரில் சீனா வெற்றி பெற்றதன் 80-ம் ஆண்டு வெற்றி விழா தலைநகர் பெய்ஜிங்கில் உள்ள தியானன்மென் சதுக்கத்தில் நேற்று நடைபெற்றது.
மிகப் பிரம்மாண்டமான முறையில் நடத்தப்பட்ட இந்த வெற்றி விழாவில், சீன ஜனாதிபதிஜி ஜின்பிங்கின் அழைப்பை ஏற்று ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புதின், வட கொரிய ஜனாதிபதி கிம் ஜோங் உன், இந்தோனேஷிய ஜனாதபதி பிரபோவோ சுபியாண்டோ உட்பட பலர் கலந்து கொண்டனர்.
அத்துடன், ஆஸ்திரேலியா, விக்டோரிய மாநிலத்தின் முன்னாள் பிரிமியர் டான் ஆண்ட்ரூஸ{ம், ஆஸ்திரேலியாவின் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் பாப் காரும் பங்கேற்றிருந்தனர்.
சீன ஜனாதிபதியின் பிரத்தியேக அழைப்பின் பிரகாரமே இவர்கள் இருவரும் பங்கேற்றுள்ளனர். 2015-க்குப் பிறகு இரண்டாவது முறையாக இத்தகைய பிரம்மாண்ட வெற்றி விழா ராணுவ அணிவகுப்புப் பேரணியை சீனா நடத்தி உள்ளது.
சுமார் 70 நிமிடங்கள் நடைபெற்ற பேரணியில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் பங்கேற்றனர். 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள், அணிவகுப்புப் பேரணியில் கலந்து கொண்டனர்.
மேலும், இதில் 100-க்கும் மேற்பட்ட போர் விமானங்கள், ட்ரோன்கள் உள்ளிட்ட அதிநவீன ராணுவ தளவாடங்கள் பங்கேற்றன. 80,000 அமைதிப் புறாக்களும் வண்ணவண்ண பலூன்களும் வானில் பறக்கவிடப்பட்டன.
இந்த பேரணி தொடர்பில் அமெரிக்கா கடும் அதிருப்தி வெளியிட்டுள்ளது.
ஆஸ்திரேலிய அரசியில் பிரமுகர்கள் இருவர் பேரணியில் பங்கேற்றமை கடும் விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளது. எனினும், விக்டோரிய மாநில பிரிமியர் ஜசிந்த ஆலன், இதனை வரவேற்றுள்ளார்.
சீன மக்களால் டேனியல் ஆண்ட்ரூஸ் இவ்வளவு உயர்ந்த மரியாதைக்கு உள்ளாக்கப்படுவது விக்டோரியாவிற்கு நல்லது. விக்டோரியா சீனாவின் பழைய நண்பர், இந்த தொடர்புகள் நமது மாநிலத்திற்கு மிகவும் மதிப்புமிக்கவை என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இராணுவ பலத்தை காட்டுவதற்காக சீனா நடத்திய நிகழ்வில் பங்கேற்றது தவறு என லிபரல் செனட்டர்கள் குறிப்பிட்டுள்ளனர்.