கத்தாரில் ஹமாஸ் தலைவர்களை இலக்கு வைத்து இஸ்ரேல் நடத்திய தாக்குதலை ஆஸ்திரேலியா வன்மையாகக் கண்டித்துள்ளது.
இது கத்தாரின் இறையாண்மையை மீறும் செயல் எனவும், போர் நிறுத்த பேச்சை பின்நோக்கி தள்ளும் எனவும் ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானீஸி தெரிவித்தார்.
இஸ்ரேலின் கிழக்கு ஜெருசலேமில் ஹமாஸ் இயக்கத்தினர் நடத்திய திடீர் தாக்குதலில் நேற்று 6 பேர் உயிரிழந்தனர்.
பேருந்தில் பயணம் செய்த மற்றும் பேருந்துக்கு காத்திருந்த பயணிகள் மீது காரில் வந்த பயங்கரவாதிகள் கண்மூடித்தனமாக இந்த துப்பாக்கிச்சூட்டை நடத்தியுள்ளனர். இதில் 12 பேர் படுகாயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் கத்தார் தலைநகர் தோஹாவில் உள்ள ஹமாஸ் இயக்க தலைவர்கள் மீது இஸ்ரேல் ராணுவம் வான்வழி தாக்குதலை நடத்தியது.
இந்த தாக்குதலில் ஹமாஸின் முக்கிய தலைவர்கள் தப்பிவிட்டதாகவும், எனினும் ஹமாஸின் காசா பிரிவு தலைவரின் மகன் உட்பட 6 பேர் கொல்லப்பட்டதாகவும் ஹமாஸ் உறுதி செய்துள்ளது.
இத்தாக்குதல் சம்பவத்தை கத்தார் வன்மையாகக் கண்டித்துள்ளது. இந்நிலையிலேயே ஆஸ்திரேலியாவும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.