சீன இணையத்தளங்கள்மீது தைவான் சைபர் தாக்குதல் நடாத்தியதாக கூறப்படும குற்றச் சாட்டை முற்றாக மறுத்த தைவான், சீனாதான் உண்மையான ஹேக்கர்கள் நாங்கள் அல்ல என்றும் கூறியுள்ளது.
பெய்ஜிங்கின் குற்றச்சாட்டுகள் போலியானவை என்று மூத்த அரசாங்க அதிகாரிகள் செவ்வாயன்று தைபேயில் தெரிவித்தனர்.
சீனாவின் தேசிய பாதுகாப்பு அமைச்சகம் திங்களன்று, தைவான் இராணுவ ஆதரவு கொண்ட அநாமதேய 64 என்ற ஹேக்கிங் குழு சீனாவில் உள்ள இலக்குகளுக்கு எதிராக சைபர் தாக்குதல்களை நடத்தி வருவதாகக் கூறியது.
ஹேக்கிங் குழுவில் அங்கம் வகிக்கும் மூன்று தைவானியர்களின் பெயரையும் அது குறிப்பிட்டு அவர்களின் படங்களையும் வெளியிட்டது.
ஜனநாயக ரீதியாக ஆளப்படும் தைவானை தனது சொந்தப் பிரதேசம் என்று சீனா உரிமை கோரி வருகிறது. இந்த நிலையிலேயே சீன இணையத்தளங்கள் ஹேக்கிங் செய்யப்படுவதாகவும் மற்றும் தவறான தகவல்களால் தாங்கள் பாதிக்கப்பட்டதாக சீனா அடிக்கடி புகார் கூறுகிறது,
நாடாளுமன்றத்தில் செய்தியாளர்களிடம் பேசிய தைவான் பாதுகாப்பு அமைச்சர் வெலிங்டன் கூ, உலகம் முழுவதும் ஹேக்கராக இருப்பது சீனாதான்.
"தினசரி சைபர் தாக்குதல்கள் வரும்போது சீனாதான் தைவான் மற்றும் எங்களைப் போன்ற ஜனநாயக கொள்கைகளைக் கொண்ட நாடுகளுக்கு எதிராக அதைச் செய்கிறது.
அவர்கள்தான் உண்மையான தோற்றுவிப்பாளர்கள்," என்று அவர் கூறினார். சீனாவின் குற்றச்சாட்டுகள் உண்மைக்குப் புறம்பானவை என்றும் மேலும் கூறினார்.
மேலும் நாடாளுமன்றத்தில் பேசிய பிரதமர் சோ ஜங்-தை, தைவான் மீது தாக்குதல் நடத்துவதற்காக சீனா பொய்யான செய்திகளை பரப்பி வருவதாக கூறினார். சீனா தைவான் மீது தன் ஆதிக்கத்தை செலுத்த முனைகிறது. அதன் உரிமைகளை உறுதிப்படுத்த கடந்த ஐந்து ஆண்டுகளாக இராணுவ மற்றும் அரசியல் அழுத்தங்களை சீனா மேற் கொண்டு வருவது அதிகரித்ததுள்ளது.
"எங்களுக்கு எதிரான போலி செய்தி குற்றச்சாட்டுகளுக்கு நாம் வலுக்கட்டாயமாக பதிலளிக்க வேண்டும்" என்று சோ கூறினார்.
தைவானை தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்கு பலத்தை பயன்படுத்துவதை சீனா ஒருபோதும் கைவிடவில்லை.
தைவான் அரசாங்கம் பெய்ஜிங்கின் இறையாண்மை உரிமைகோரல்களை நிராகரிக்கிறது, தீவின் மக்கள் மட்டுமே தங்கள் எதிர்காலத்தை தீர்மானிக்க முடியும் என்று கூறினர்.
சபா.தயாபரன்.