ஆஸ்திரேலியாவுக்கும், பப்புவா நியூ கினியாவுக்கும் இடையில் இன்று கைச்சாத்திடப்படும் என எதிர்பார்க்கப்பட்ட புதிய பாதுகாப்பு ஒப்பந்தம் தொடர்ந்து இழுபறி நிலையை எட்டியுள்ளது.
இதனால் ஒப்பந்தத்துக்கு பதிலாக ஆவணமொன்றில் இரு நாட்டு தலைவர்களும் கைச்சாத்திட்டுள்ளனர் என தெரியவருகின்றது. ஆஸ்திரேலியாவுடன் கைச்சாத்திடப்பட வேண்டிய பாதுகாப்பு ஒப்பந்தம், பப்புவா நியூ கினியா அமைச்சரவையில் நேற்று முன்வைக்கப்பட்டாலும் அதற்கு அனுமதி கிடைக்கப்பெறப்படவில்லை.
பப்புவா நியூகினியா மக்கள் ஆஸ்திரேலியா பாதுகாப்பு படைகளில் சேரவும், ஆஸ்திரேலிய படைகளுடன் இணைந்து செயற்படவும் புதிய பாதுகாப்பு ஒப்பந்தத்தில் ஏற்பாடு உள்ளது.
இராணுவ தாக்குதல்களின்போது பதிலடியை ஒருங்கிணைப்பதற்குரிய வழிமுறை, சைபர் பாதுகாப்பு, கூட்டு போர் பயிற்சி உள்ளிட்ட விடயங்களும் உள்வாங்கப்பட்டுள்ளன.
பசுபிக் பிராந்தியத்தில் சீனாவின் செல்வாக்கை கட்டுப்படுத்துவதற்குரிய ஒரு நகர்வாக இது பார்க்கப்படுகின்றது.
இந்நிலையில் ஒப்பந்தம் கைச்சாத்திடப்படாவிட்டாலும், அதற்குரிய இணக்கப்பாட்டு ஆவணம் கைச்சாத்திடப்பட்டுள்ளது. ஆஸ்திரேலிய மற்றும் பப்புவா நியூ கினியா ஆகிய நாடுகளின் பிரதமர்கள் இதில் கைச்சாத்திட்டுள்ளனர்.
தமது நாட்டு இறையாண்மை தொடர்பில் எழுந்த அச்சுறுத்தல் காரணமாகவே பப்புவா நியூ கினியா இதனை தாமதப்படுத்துகின்றது எனக் கூறப்படுகின்றது.
எனினும், ' பப்புவா நியூ கினியாவின் இறையாண்மையை மதிக்கின்றோம். ஒப்பந்தம் விரைவில் கைச்சாத்திடப்படும்." - என்று ஆஸ்திரேலிய பிரதமர் இன்று நம்பிக்கை வெளியிட்டார்.
பப்புவா நியூ கினியா ஆஸ்திரேலியாவிடமிருந்து சுதந்திரம் பெற்று நேற்றுடன் 50 ஆண்டுகள் நிறைவடைந்தன.
சுதந்திர தின விழாவுக்காக ஆஸி. பிரதமரும் அங்கு சென்றிருந்தார். ஒப்பந்தத்தை நிறைவேற்றிய பிறகே அவர் நாடு திரும்புவார் என எதிர்பார்க்கப்பட்டது. எனினும், ஒப்பந்தம் கைச்சாத்திடப்படாத நிலையிலேயே பிரதமர் ஆஸி. திரும்பியுள்ளார்.
ஆஸ்திரேலியாவுடன் பாதுகாப்பு ஒப்பந்தம் கைச்சாத்திடுவதில் இருந்து பசுபிக் தீவு நாடான வனுவாட்டு திடீரென பின்வாங்கியது. இந்நிலையில் பப்புவா நியூ கினியாவிலும் இழுத்தடிப்பு இடம்பெறுகின்றமை அல்பானீசுக்கு பெரும் தலையிடியாகவும், சவாலாகவும் மாறியுள்ளது.